தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் இன்று நடைபெற்றது. விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று அறிவித்தனர். கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்த பாதிரியார்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் சிறப்புரை ஆற்றினார்.
"தமிழக மண் என்பது தாயன்பு கொண்டது. இங்கு பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்துப் பண்டிகைகளும் பாகுபாடின்றி கொண்டாடப்படுகின்றன. நம்முடைய வழிபாட்டு முறைகளும், வாழ்க்கை முறைகளும் வெவ்வேறாக இருக்கலாம்; ஆனால் நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற உணர்வோடு வாழும் சகோதரர்கள்."
"கட்சி தொடங்கியபோது எனக்கு 'கடவுள் நம்பிக்கை உண்டு' என்று ஏன் கூறினேன் தெரியுமா? ஒரு மனிதனின் உண்மையான நம்பிக்கைதான் அவனுள் மத நல்லிணக்கத்தை விதைக்கும். அதுதான் மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கக் கற்றுத் தரும். அத்தகைய ஆழமான தன்னம்பிக்கை இருந்தால், வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட சவால்களையும் நாம் வென்றுவிடலாம்."
"சொந்த சகோதரர்களே பொறாமையால் ஒரு இளைஞனைப் பாழும் தள்ளிவிட்டார்கள். ஆனால், அந்த இளைஞன் தன் நம்பிக்கையால் மீண்டு வந்து, அதே நாட்டுக்கு அரசனானான். தன்னைத் தள்ளிவிட்ட சகோதரர்களை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டையுமே அவன் காப்பாற்றினான். அந்தக் கதை யாரைப் பற்றியது என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. துரோகங்களையும் எதிரிகளையும் கடந்து மக்கள் மீது நேசம் வைப்பவர்களே இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு இதுவே சாட்சி."
"மதச்சார்பற்ற சமூகநீதிப் பாதையில் பயணிப்பதில் நான் 100 சதவீதம் உறுதியாக இருப்பேன். சமூக மற்றும் சமய நல்லிணக்கத்தைக் காப்பதே நமது இலக்கு. விடியலுக்கான ஒரு ஒளி விரைவில் பிறக்கும்; அந்த ஒளி நம் அனைவரையும் வழிநடத்தும். அனைத்துப் புகழும் இறைவனுக்கே! நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்!" எனத் தனது உரையைத் தலைவர் விஜய் நிறைவு செய்தார்.