

சமீபகாலமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு படிப்பதற்காகவும், வேலைக்காகவும் செல்பவர்கள் பல்வேறு இன்னல்களையும், இனப்பாகுபாடுகளையும் சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவில் இப்போது கணிசமான அளவுக்கு இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். பல பகுதிகளில் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்காவில், இந்தியாவிற்கு எதிரான பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் படிப்பதற்காக செல்லும் மாணவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பிஎச்டி படிக்க சென்ற இரு மாணவர்களுக்கு நேர்ந்த இனப்பாகுபாட்டிற்காக அவர்களுக்கு $200,000 (இந்திய மதிப்பில் சுமார் 1.6 கோடி ரூபாய்) இழப்பீடு வழங்கப்பட்டாலும் அவர்கள் இருவரும் தங்கள் முனைவர் படிப்பை அமெரிக்காவில் தொடர முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது, வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் உள்ள கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் (CU Boulder) பிஎச்டி படிக்க சென்ற பீகாரை சேர்ந்த ஆதித்யா பிரகாஷ் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த ஊர்மி பட்டாச்சார்யா ஆகியோருக்கு தான் இந்தப் பாகுபாடு நடந்துள்ளது.
இந்த விவகாரம் முதன் முதலாக 2023-ம் ஆண்டில் ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் மானுடவியல் துறையில் முனைவர் பட்டம் படித்து வந்த பிரகாஷ், அங்கு இருந்த பொது மைக்ரோவேவில் தனது பாலக் பன்னீர் உணவைச் சூடுபடுத்திய போது அங்கிருந்த ஊழியர் உணவில் இருந்து ஹெவி வாசனை வருவதால் மைக்ரோவேவைப் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி உள்ளார். ஆனால் ஊழியரின் வார்த்தையை ஏற்க மறுத்த நிலையில் பிரச்சினை ஆரம்பித்துள்ளதுடன், அதன் பிறகு பிரகாஷை குறிவைத்து துறையில் உள்ள பிற அதிகாரிகள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை அதன்பிறகு நடப்பது வாடிக்கையாகி உள்ளது.
மேலும் வேண்டுமென்றே ஊழியர்களை அச்சுறுத்தியதாகவும் பிரகாஷ் மீது ஆதாரமே இல்லாமல் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், அதனை காரணமாக வைத்து அவருக்குக் கிடைத்து வந்த நிதியுதவியும் நிறுத்தப்பட்டது.
இதேபோன்ற மோசமான சம்பவம் ஊர்மி பட்டாச்சார்யா என்ற மற்றொரு மாணவிக்கும் ஏற்பட்டுள்ளது. ஊர்மிளாவும் சில மாணவர்களும் இந்திய உணவைச் சாப்பிட எடுத்து வந்து நிலையில் அதை பெரிதுபடுத்தி, வேண்டும் என்றே கலவரத்தை உண்டாக ஊர்மிளா முயன்றதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியதுடன் அதன்பிறகு இவருக்கும் அதிகளவு பிரஷர் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவருக்கும் முதுகலைப் பட்டத்தை வழங்கவும் பல்கலைக்கழகம் மறுத்துவிட்டதால் அதிர்ச்சியும், மனஉளைச்சலும் அடைந்த இருவரும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவு செய்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு எதிராக கடந்தாண்டு (2025) மே மாதம் சிவில் உரிமை வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் பல்கலைக்கழகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபணமானதுடன், ஆதித்யா பிரகாஷ், ஊர்மி பட்டாச்சார்யாவும் பாகுபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக கொலராடோ போல்டர் பல்கலைக்கழகம் இருவருக்கும் $200,000 (இந்திய மதிப்பில் சுமார் 1.6 கோடி ரூபாய்) இழப்பீடாக தரவேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது. மேலும், அவர்களுக்கு முதுகலைப் பட்டத்தை வழங்கவும் அந்தப் பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டது. ஆனால் அவர்கள் இருவரும் அதே பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து படிப்பதற்கோ அல்லது பணிபுரிவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆதித்யா பிரகாஷ், ஊர்மி பட்டாச்சார்யாவும் உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் கோர்ட்டின் இந்த தீர்ப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.