மேலைநாடுகளை போன்று இந்தியாவிலும் லிவ் இன் உறவில் வாழும் கலாச்சாரம் இப்போது அதிகரித்து வருகிறது. திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் சிலரும், கமிட்மென்ட் இல்லாத சுதந்திரமான வாழ்க்கை முறை என பலரும் இதுபோன்ற வாழ்க்கை முறையை தேர்வு செய்கின்றனர். அதாவது, லிவ்-இன் உறவு என்பது இரண்டு காதலர்கள் திருமணமான தம்பதிகளைப் போல ஆனால் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வது.
மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால் மற்ற நாடுகளைப் போலவே, இந்தியாவும் லிவ்-இன் உறவுகளை ஏற்றுக்கொண்டு வந்தாலும், திருமணத்தை உயர்வாகக் கருதும் உலகின் சில பகுதிகளிலும், சில கலாச்சாரங்களிலும் இன்னும் லிவ்-இன் உறவுமுறை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இத்தகைய உறவுகள் சுதந்திரம் என்று தோன்றினாலும், பலருக்கு கசப்பான, ஆபத்தான அனுபவமாக மாறிவிடுகிறது. இதில், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சம அளவில் ஏமாற்றங்களை சந்திக்கின்றனர்.
அப்படி ஒரு வழக்கின் தீர்ப்பு தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது குடும்பத்தினர் மிரட்டுவதால் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டி போலீஸ் நிலையத்தை அணுகியதாகவும், ஆனால் போலீசார் தங்களது புகார்களை ஏற்கவில்லை என்பதால் லிவ்-இன் உறவுகளில் இருக்கும் 12 பெண்கள் கோர்ட் கதவை தட்டியுள்ளர்.
அதாவது லிவ்-இன் உறவுகளில் இருக்கும் 12 பெண்கள் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி அளித்த தீர்ப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
12 மனுக்களையும் ஒன்றாக விசாரித்த நீதிபதி விவேக் குமார் சிங், திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வது குற்றமல்ல என்று கூறிய அவர், மனித வாழ்வுக்கான உரிமை தான் இங்கு மிகவும் உயர்ந்தது. ஒருவன் மைனர் அல்லது மேஜர், திருமணமானவர் அல்லது திருமணமாகாதவர் என எப்படி இருந்தாலும் வாழ்வதற்கான உரிமையே அடிப்படையானது.
மனுதாரர்கள் திருமணம் செய்யவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி, அவர்களது அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
ஒரு தனிநபர் 18 வயது நிரம்பியவுடன், எங்கு, யாருடன் வாழ வேண்டும் என்பதை முடிவு செய்ய அந்த நபர் சட்டப்பூர்வமாக சுதந்திரமாக உள்ளார் என்று நீதிமன்றம் கூறியது.
பாதுகாப்பு கோரிய மனுவை ஏற்ற நீதிமன்றம், மனுதாரர்கள் அனைவரும் 18 வயதைத் தாண்டிய மேஜர்கள் என்பதால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார்கள். அது சரியா தவறா என்பதைத் தீர்மானிப்பது நீதிமன்றத்தில் வேலை இல்லை. மனுதாரர்கள் எந்தவொரு எந்தக் குற்றமும் செய்யாத போது, பாதுகாப்பு வழங்குவதற்கான அவர்களின் பாதுகாப்பு கோரிக்கையை ஏற்காமல் இருக்க எந்தக் காரணமும் தெரியவில்லை. மனுதாரர்கள் அமைதியாக ஒன்றாக வாழ உரிமை உண்டு. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மேலும், மனுதாரர்கள் தங்கள் வயதை உறுதி செய்யச் சட்ட ரீதியான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அதில் அவர்கள் மேஜர் என்பது உறுதியானால்.. அவர்கள் லிவ்-இன் உறவில் இருப்பதற்கு எதிராக போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.
அவர்களின் வயதை உறுதி செய்ய ஆவணம் இல்லை என்றால் அவர்களின் வயதை உறுதிப்படுத்த, எலும்பு உறுதி பரிசோதனை உட்படச் சட்டப்பூர்வ நடைமுறைகளை போலீசார் பின்பற்றலாம் அல்லது வயதை சரிபார்க்க பிற சட்டப்பூர்வ முறைகளைப் பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், காவல்துறை, இந்தத் தம்பதிகளின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு செய்யாமல், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது இதேபோன்ற ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாகவும், காவல்துறையினரிடமிருந்து பாதுகாப்பு கிடைக்காத பட்சத்தில் தம்பதிகள் நீதிமன்றங்களை நாடுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், திருமணத்தை கட்டாயப்படுத்தாமல் உறவுகளில் உள்ள பெண்களுக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலம் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்வதை அங்கீகரிக்கிறது என்பதை நீதிமன்றம் இதன்மூலம் மேற்கோள் காட்டிள்ளது.