

நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கையானது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் காற்று மாசுபாடு ஒருபுறம் இருந்தாலும், சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்தில் சிக்கினால், வாகன ஓட்டிகளின் நிதிச் சுமையை குறைக்க காப்பீடு திட்டம் உதவுகிறது.
வாகனங்களுக்கு காப்பீடு எடுக்க வேண்டியது கட்டாயம் என அரசு விதி கூறுகிறது. இருப்பினும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் காப்பீடு எடுக்காமல் உள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பானது என்றாலும், காப்பீட்டு விதிமுறைகள் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுவதால் ஏற்படும் குழப்பத்தாலேயே பலரும் காப்பீடு எடுக்காமல் உள்ளனர்.
இந்நிலையில் வாகனங்களுக்கு காப்பீடு கட்டாயம்; காப்பீடு எடுக்காத வாகனங்களைப் பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த துங்கலா தனலட்சுமி என் கணவர் கடந்த 1996 ஆம் ஆண்டு காரில் செல்லும் போது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய இந்த காருக்கு நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் காப்பீட்டைத் தர மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோட்டில் மேல்முறையீடு செய்தது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆதரவாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜாய் பாசு, “நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேலான வாகனங்கள் காப்பீடு இன்றி இயக்கப்படுகின்றன. காப்பீடு எடுப்பவர்கள் சிலருக்கும் சரியான முறையில் காப்பீட்டுத் தொகை திரும்ப கிடைப்பதில்லை. குழப்பமான விதிமுறைகளை கூறி காப்பீட்டுத் தொகையை தர இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மறுக்கின்றன” எனக் கூறினார்.
இதனையடுத்து நாட்டில் உள்ள வாகனங்களில் பாதிக்கும் மேல் காப்பீடு இல்லாமல் இருப்பது மிகவும் தீவிரமான பிரச்சனை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், “போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் வழங்கப்படும் அபராத தொகையை செலுத்தாதவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்வது போலவே, காப்பீடு எடுக்காதவர்களின் வாகனங்களையும் தற்காலிகமாக பறிமுதல் செய்ய மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.
அதேபோல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக விதிமுறைகளை வகுத்துள்ளன. இதனால் காப்பீடு எடுத்தவர்களும், காப்பீட்டுத் தொகையைப் பெற முடியாத நிலையில் பல ஆண்டுகளாக சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படி வாகன விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.
இதன்படி மத்திய அரசும், காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமும் இணைந்து புதிய கொள்கை மாற்றங்களை கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.