ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ்! மாஸ் காட்டும் தளபதி விஜய்!

ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ்! மாஸ் காட்டும் தளபதி விஜய்!

ளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஒரு மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பின்தொடர்வோரை எட்டி சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் மாஸான படங்களைத் தேர்வு செய்து, தனது கிளாஸான நடிப்பை வெளிப்படுத்தி வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் எது செய்தாலும் தனது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பார்க்கப்படும். இவர் தனக்கென மிகப்பெரிய ரசிகர் சாம்ராஜ்யத்தையே வைத்திருக்கிறார் எனலாம். இதுவரை ட்விட்டரில் மட்டுமே அவ்வப்போது ஆக்டிவாக இருந்த தளபதி விஜய், நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இணைந்து தனது ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் நீந்தச் செய்துள்ளார். 

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருடைய அஃபிஷியல் கணக்கு தொடங்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே 10 லட்சம் ஃபாலோயர்கள் மளமளவென பின் தொடர்ந்துவிட்டனர். இது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தற்போதுவரை இதில் சுமார் 4.3 மில்லியன் நபர்கள் இவருடைய பக்கத்தைப் பின் தொடர்ந்துள்ளனர். நேரம் செல்லச் செல்ல இந்த கணக்கிற்கு வரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. மேலும் லியோ பட கெட்டப்பில் அவர் பகிர்ந்துள்ள முதல் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த தகவலானது தளபதி விஜய் ரசிகர்களின் வாயிலாக பலவிதப்பட்ட சமூக வலைதளங்களில் #ThalapathyOnINSTAGRAM என்கிற ஹேஷ்டேக் மூலம் பகிரப்பட்டு வருகிறது. 

மேலும் தளபதி விஜய் அவர்கள் இன்ஸ்டாகிராம் லைவில் வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அடுத்ததாக லியோ திரைப்படம் குறித்த அனைத்து அப்டேட்டுகளையும் இன்ஸ்டாகிராமிலேயே பகிரும்படியும் கேட்டு வருகின்றனர். விஜயின் இந்த அஃபிஷியல் இன்ஸ்டாகிராம் கணக்கை சூர்யா, சிம்பு, மஞ்சுமா மோகன், ஹன்சிகா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல பிரபலங்களும் பின்தொடர்ந்து வருகிறார்கள். விஜய் இன்ஸ்டாகிராமில் இணைந்தது குறித்து பலரும் நேர்மறையான கருத்துக்களைக் கூறி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

சமீபத்தில் கூட ஒரு குழந்தை விஜய் அங்கிளோடு பேச வேண்டும் என ஆசைப்பட்டு அடம்பிடித்த காணொளி வைரலானதைப் பார்த்துவிட்டு, அவருடன் வீடியோ காலில் தளபதி விஜய் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இன்ஸ்டாகிராமில் இணைந்தது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியத்தில் அழுத்தியது மட்டுமின்றி பாராட்டுகளையும் குவித்துவருகிறது. 

தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. தெலுங்கு-தமிழ் என இரு மொழிகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று 350 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில், விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் தளபதி விஜய் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இவருக்கு வில்லனாக அர்ஜூன், சஞ்சய்தத், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் போன்ற ஏராளமானவர்கள் நடித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 

இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே வெற்றி திரைப்படங்கள் என்பதால், லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும், அதிகரித்துக் காணப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com