

சென்னையில் பறக்கும் ரயில் சேவை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பல ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்த வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை, தற்போது பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
சரக்கு ரயில் சோதனை ஓட்டமும், பயணிகள் ரயில் சோதனை ஓட்டமும் நிறைவு பெற்றதையடுத்து, நாளை மார்ச் 14ஆம் தேதி முதல் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை பயணிகள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட உள்ளது.
தொடக்க காலத்தில் பறக்கும் ரயில் சேவையைத் திட்டமிட்ட போது, கடற்கரை முதல் மயிலாப்பூர், மயிலாப்பூர் முதல் வேளச்சேரி மற்றும் வேளச்சேரி முதல் பரங்கிமலை என 3 கட்டங்களாக திட்டமிட்டது. இதில் முதல் இரண்டு கட்டப் பணிகள் வெற்றிகரமாக முடிந்து பறக்கும் ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
ஆனால் நில ஆக்கிரப்பில் ஏற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தால், மூன்றாம் கட்ட பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பணிகள் முடிவடைந்து சரக்கு ரயில் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனால் 2026 ஜனவரி மாதத்திலேயே வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்சினைகளால், தாமதம் ஏற்பட்டு மார்ச் 10-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான இறுதிகட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், கடைசி நேரத்தில் மத்திய அரசு இதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மேலும் 4 நாட்கள் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் தேதி தள்ளிப்போனது. இதன்படி ஆணையர் வழிகாட்டுதல் படி பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, நாளை (மார்ச் 14) முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட இருக்கிறது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை நாளை தொடங்கப்பட இருப்பதால், பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக பயணிகள் எதிர்பார்த்த இந்தப் போக்குவரத்து, தற்போது பயன்பாட்டிற்கு வரவுள்ளதால் சென்னை மக்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகளால் கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு வரையிலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் பலரும் கடுமையான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட இருப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 43 ஜோடி ரயில்களும், கடற்கரை முதல் வேளச்சேரி வரை 2 ஜோடி ரயில்களும், பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை 3 ஜோடி ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.