
தங்கத்தின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் வரலாறு காணாத விலையேற்றத்தைக் கண்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.80,000-ஐக் கடந்துள்ளது. இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இடையே தங்கத்தின் தொடர் விலையேற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் 9 காரட் தங்கம் இணையத்தில் வைரலாகி மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியது. இருப்பினும் 9 காரட் தங்கத்தை வாங்குவது உண்மையிலேயே பலன் தருமா என்ற குழப்பமும் நீடிக்கிறது.
இந்நிலையில் தங்கத்தின் விலை குறைவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது தென்படுகின்றன. அதாவது நாட்டிலேயே முதன்முறையாக தனியார் தங்கச் சுரங்கம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்தச் சுரங்கம் திறக்கப்பட்டால் தங்கத்தின் விலை இந்தியாவில் குறையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் மிகப்பெரிய தனியார் தங்கச் சுரங்கம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக டெக்கான் கோல்டு மைன்ஸ் மேலாண்மை இயக்குநரான ஹனுமா பிரசாத் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் வெளிநாட்டில் இருந்து 1,000 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக இந்தியா தங்கத்தை தான் அதிகளவில் இறக்குமதி செய்கிறது.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலை அடுத்த ஜொன்னகிரியில் மிகப்பெரிய முதல் தனியார் தங்கச் சுரங்கத்தை ஜியோமைசூர் சர்வீசஸ் நிறுவனம் அமைத்து வருகிறது. இந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை டெக்கான் கோல்டு மைன்ஸ் நிறுவனம் வைத்துள்ளது.
Confederation of Indian Industry (CII) இந்தியா மைனிங் மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற டெக்கான் கோல்டு மைன்ஸ் மேலாண்மை இயக்குநரான ஹனுமா பிரசாத், விரைவில் தங்கச் சுரங்கத்தில் உற்பத்தி தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் தங்கச் சுரங்கத்தில் உற்பத்தியைத் தொடங்க சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றோம். அதோடு ஆந்திர மாநில அரசின் தடையின்மைச் சான்றிதழைப் பெற தற்போது விண்ணப்பித்துள்ளோம். தற்போதைய நிலையில் நாட்டில் தங்கத்தின் உற்பத்தி 1.5 டன்னாக இருக்கிறது. இந்தச் சுரங்கம் முழுமையான உற்பத்திக்குத் தயாரானதும் கூடுதலாக 1 டன் தங்கம் இந்தியாவிற்கு கிடைக்கும்” என அவர் தெரிவித்தார்.
தனியார் தங்கச் சுரங்கம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் தங்கத்தின் விலை குறையும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தனியார் சார்பில் தங்கச் சுரங்கத்தில் உற்பத்தி செய்யப்படுவதால், விலை எந்த அளவிற்கு குறையும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.