
கோவையில் வருகின்ற அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் உலகப் புத்தொழில் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கு பெற உள்ளனர். இந்த மாநாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்க உள்ளோர், புதிதாக தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே தொழில் தொடங்கி அதனை விரிவாக்கம் செய்ய நினைப்பவர்கள் என அனைவருமே பங்கேற்கலாம்.
தொழில் முனைவோர்கள் முதலீட்டை ஈர்ப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பாக இந்த மாநாடு இருக்கும் என கருதப்படுகிறது. தொழில் முனைவோர்கள் வழங்கும் தொழில் குறித்த புதுப்புது ஐடியாக்கள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் பட்சத்தில், முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தொடங்குவர். ஒவ்வொரு முதலீட்டாளரும் குறைந்தபட்சம் ரூபாய் 100 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
உலக புத்தொழில் மாநாடு குறித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், “ வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் உலக புத்தொழில் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு முதலீட்டாளரும் குறைந்தபட்சம் ஐந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 500 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயனடைய உள்ளன.
முதலீட்டாளர்கள் அனைவரும் ரூபாய் 100 கோடியை குறைந்தபட்ச முதலீடாக நிர்ணயித்துள்ளனர். புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்கள், புரோட்டோடைப் வைத்துள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே தொழில் தொடங்கி தொழிலை விரிவாக்கம் செய்ய உள்ளவர்கள் உள்பட அனைவரும் இந்த மாநாட்டில் தங்கள் தொழில் குறித்த ஐடியாக்களை முன்வைக்கலாம். இந்த ஐடியாக்கள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் பட்சத்தில், அவர்கள் முதலீடு செய்வதை உறுதி செய்வர்.
இந்த மாநாட்டில் சர்வதேச முதலீட்டாளர்களும் பங்கேற்க இருப்பதால் முதலீட்டுத் தொகை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. ஏற்கனவே விரிவாக்கத்திற்கு தயாராக உள்ள தொழில் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு, மாநாட்டில் கலந்து கொள்ளும்படி டிஎன் ஸ்டார்ட்அப் (TN Startup) சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, சேலம், திருநெல்வேலி, கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், மதுரை, ஓசூர், தூத்துக்குடி, திருச்சி மற்றும் கோவையில் டிஎன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பவர்கள் டிஎன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
ஏ.ஐ., டெக், டீப் டெக், அக்ரி டெக், ஹெல்த்டெக், ஸ்பேஸ் டெக், லைப் சயின்சஸ் டெக், ரூரல் லைவ்லிகுட் மற்றும் கிளைமேட் டெக் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உலக புத்தொழில் மாநாடு உதவும் என்பதால், தொழில் முனைவோர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும்படி தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.