தொழில் தொடங்க உடனே வாங்க! 30% மானியத்துடன் ரூ.1 கோடி வரை கடன்!

Business Loan For Army Officers
Business Loan
Published on

இளைஞர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தொழில்முனைவோராக மாற்ற தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படுவதோடு, மானியமும் அளிக்கப்படுகிறது. இதனால் தொழில் செய்ய விருப்பமுள்ள நபர்கள் பலரும் தமிழக அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன் வழங்கும் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் மூலம் முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு தொழில் தொடங்குவதற்கு முதலீடாக ரூ.1 கோடி வரை கடன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதவிர இத்திட்டத்தின் கீழ் கடன் வாங்கி தொழில் தொடங்கினால், மூலதன மற்றும் வட்டி மானியமும் வழங்கப்படும். அதாவது கடன் தொகையில் 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும். முன்னாள் இராணுவ வீரர்களை தொழில்முனைவோராக மாற்ற பயிற்சியும் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு குறைந்தபட்ச வயது என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதோடு விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் கடன் வாங்கலாம். இதன்படி கோழி, ஆடு, மாடு, பட்டுப்புழு மற்றும் பன்றி வளர்ப்பு உள்ளிட்டத் தொழில்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

முன்னாள் இராணுவ வீரர்கள், இராணுவ வீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், தகுதியுடைய முன்னாள் இராணுவ வீரர்களின் மகன்கள், மணமாகாத மகள்கள் மற்றும் கணவனை இழந்த முன்னாள் இராணுவ வீரர்களின் மகள்கள் ஆகியோர் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உடையவர்கள்.

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் கடன் பெற மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் தொழில்முனைவோர் திட்டங்களில் ஏற்கனவே கடன் பெற்றிருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் தொடங்க விரும்புவோர் http://www.exwel.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள இராணுவ வீரர்கள் நலத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்றும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 400 இராணுவ குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த 5 தொழில்களை கிராமங்களில் தொடங்கினால் நிச்சயம் வெற்றி தான்!
Business Loan For Army Officers

முன்னதாக தமிழ்நாடு முழுக்க 848 இராணுவ வீரர்களிடம் இருந்து காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 348 பேரின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது இவர்களில் 15 பேருக்கு மூலதன மானியத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி, காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இராணுவ வீரர்களின் குடும்பங்களிடம் இருந்து மேலும் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதால், இதற்கான நிதி கூடுதலாக ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளுக்கு அடித்த‌ ஜாக்பாட்! இனி உடனுக்குடன் பயிர்க் கடன் கிடைக்கும்!
Business Loan For Army Officers

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com