
இயற்கையின் அழகை ரசிக்க மலையேறும் நபர்களுக்காககவே தமிழ்நாடு அரசு டிரெக் தமிழ்நாடு என்ற திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தற்போது திருவண்ணாமலையில் உள்ள போளூர் மலைப்பகுதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியானதாக உள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் வியாபாரம் மற்றும் வர்த்தகம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
மலையேறுவதும், நீர்வீழ்ச்சியில் நனைவதும் சிலருக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களாக இருக்கும். இதற்காக பலரும் மலைப் பகுதிகளில் டிரெக்கிங் செல்வது வழக்கம். டிரெக்கிங் செல்ல தமிழ்நாடு வனத்துறையின் அனுமதி அவசியமான ஒன்று. ஆர்வமுள்ள பொதுமக்களை டிரெக்கிங் அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டம் தான் ‘டிரெக் தமிழ்நாடு’. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் மலைப்பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ள நபர்கள் www.trektamilnadu.com என்ற இணையத்தளத்தில் பதிவு செய்தால், தமிழக அரசு நியமித்துள்ள அனுபவம் வாய்ந்த வழாகாட்டுநர்களால் டிரெக்கிங் அழைத்துச் செல்லப்படுவர்.
கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி தமிழக அரசால் தொடங்கப்பட்ட டிரெக் தமிழ்நாடு திட்டத்தைப் பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. இருப்பினும் சென்னை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள் தான் டிரெக் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் அதிகளவில் டிரெக்கிங் சென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் டிரெக்கிங் செல்பவர்களில் 30% பேர் பெண்கள்.
டிரெக் தமிழ்நாடு திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு கூட முடிவடையாத நிலையில், தற்போது வரை ரூ.1.5 கோடி இலாபத்தை ஈட்டியுள்ளது தமிழ்நாடு அரசு. 40-க்கும் மேற்பட்ட மலை வழிப் பாதைகளில் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் டிரெக்கிங் சென்றுள்ளனர். தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் என்ற மலைப் பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
போளூர் மலைப் பகுதியில் சுமார் 12கி.மீ. தொலைவு வரை டிரெக்கிங் அழைத்துச் செல்லப்படுவர். இந்தப் பயணமானது ரேணுகாம்பாள் கோயிலில் தொடங்கி ஜவ்வாது மலையில் உள்ள குள்ளாறு குகைகள் வரை செல்லும். இந்த மலை வழி நடைப் பயணத்தில் நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், அரிதான உயிரினங்கள், பழமையான கட்டமைப்புகள், உயரமான மலைப் பகுதிகள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் மேலும் 10 மலைப்பகுதிகளை இணைக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
டிரெக் தமிழ்நாடு திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் படியாக கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த மக்களும் டிரெக்கிங் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகாவிற்கு அருகிலும், திருவள்ளூர் மாவட்டம் ஆந்திராவிற்கு அருகிலும் இருப்பதால் அப்பகுதி மக்கள் தமிழ்நாட்டில் உள்ள மலைகளில் டிரெக்கிங் செல்ல வாய்ப்புண்டு.
டிரெக் தமிழ்நாடு திட்டத்தில் பயிற்சி பெற்ற 150 வழாகாட்டுநர்கள் உள்ளனர். இதில் 15 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டிரெக்கிங் சென்று வருபவர்களுக்கு இ-சான்றிதழ் வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது.