

94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.71% மக்களும், நகரப்புறங்களில் 11.29% மக்களும் வாழ்கின்றனர். அதில் 49,821,295 பெண்கள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பீகார் மாவட்டங்களில் உள்ள பெண்களின் தாய்பாலில், அணுகுண்டு தயாரிக்க பயன்படும் கொடிய யுரேனியம் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மிகவும் கொடிய அணுக்கதிர்கள் கொண்ட இந்த யுரேனியம், கடல் மற்றும் நிலத்தடி சுரங்கங்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இப்படி பிரித்தெடுக்கப்படும்போது, இவற்றின் கூறுகள் நீர்நிலைகளில் கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மலட்டுத்தன்மை என தீரா வியாதிகளை கொண்டுவரும் இந்த யுரேனியம் தற்போது தாய்ப்பாலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்வை பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் சன்ஸ்தான் மற்றும் ஆராய்ச்சி மையம்(Mahavir Cancer Sansthan and Research Centre), லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகம்(Lovely Professional University) மற்றும் எய்ம்ஸ் புது டெல்லி(AIIMS New Delhi) ஆகியவற்றின் மருத்துவ விஞ்ஞானிகள் நடத்தினர்.
இந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவில் தாய்ப்பாலின் மூலம் யுரேனியம் வெளிப்படுவது குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க புற்றுநோய் அல்லாத உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கண்டறிந்துள்ளனர்.
பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்பூர், சமஸ்திபூர், பெகுசராய், ககாரியா, கதிஹார் மற்றும் நாளந்தா ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 40 பாலூட்டும் தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை பகுப்பாய்வு செய்த ஆய்வில், அனைத்து மாதிரிகளிலும் யுரேனியத்தின் வேதியியல் கூறு ‘U-238’ இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் ஒரு லிட்டர் தாய்ப்பாலில், 5.25 கிராம் அளவிற்கு யுரேனியத்தின் வீரியம் இருந்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் இருந்ததாகவும், கதிஹார் மாவட்டத்தில் தான் அதிகபட்சமாக லிட்டருக்கு 5.25 கிராம் அளவும், அதற்கு அடுத்தபடியாக ககாரியா 4.035 கிராம் அளவும், நாளந்தா 2.354 கிராம் அளவும் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், தாய்ப்பாலின் மூலம் யுரேனியம் வெளிப்படுவதால், சுமார் 70% குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்,
இது, தொடர்ந்தால், சிறுநீரகம், நரம்பியல், நரம்பியல் வளர்ச்சி மற்றும் குறைந்த IQ போன்ற அபாயங்களை ஏற்படுத்தும் என்று டெல்லி AIIMS மருத்துவர் அசோக் சர்மா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தாய்ப்பாலின் மாதிரிகளில் (0-5.25 ug/L) காணப்பட்ட யுரேனியம் செறிவுகளின் அடிப்படையில், குழந்தையின் ஆரோக்கியத்தில் உண்மையான தாக்கம் குறைவாகவே இருக்கும் என்றும், தாய்மார்களால் உறிஞ்சப்படும் பெரும்பாலான யுரேனியம் முதன்மையாக சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது என்றும், தாய்ப்பாலில் குவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நிலத்தடிநீர் மாசு, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்றவை தாய்பாலில் யுரேனியம் இருப்பதற்கு காரணம் என ஆய்வின் முடிவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அசுத்தமான நீர் அல்லது உணவு மூலம் உட்கொள்ளப்படும்போது, யுரேனியம் சிறுநீரகத்தில் குவிந்து, பின்னர் படிப்படியாக வடிகட்டுதலை பாதித்து காலப்போக்கில் சிறுநீரக செல்களை சேதப்படுத்தும்.
இந்தியாவில், 18 மாநிலங்களில் உள்ள 151 மாவட்டங்களில் யுரேனியம் மாசுபாடு இருப்பதாக பதிவாகியுள்ளது. அதில் பீகாரில் மட்டும் 1.7 சதவீத நிலத்தடி நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முந்தைய உலகளாவிய ஆய்வுகளின் முடிவுகள் நிலத்தடி நீரில் அதிக யுரேனியம் செறிவுகள் இருப்பதை சுட்டிக்காட்டினாலும், மக்களிடம் உடல்நலப் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், தற்போதைய ஆராய்ச்சி, தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சுகாதார அபாயங்களை மதிப்பிடுவதற்கான அவசரத் தேவையைக் கவனத்தில் கொள்ளவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளது.