
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் தொடர் மிகவும் பிரபலமானது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆஷஸ் தொடர் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக நடத்தப்பட்டு வருகிறது. உலகக் கோப்பையைக் காட்டிலும் ஆஷஸ் தொடரை முக்கியமானதாக நினைக்கும் அளவிற்கு இந்தக் கோப்பை இரு அணிகளுக்கும் முக்கியமானது. அதேபோல் ரசிகர்களும் ஆஷஸ் தொடரை மிகவும் உயர்வாக கருதி, வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்கள்.
நடப்பாண்டு ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கிறது. இதன் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் வருகின்ற நவம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 மாதங்களுக்கும் மேல் உள்ள நிலையில், இப்போதே இந்தத் தொடரை யார் வெல்வார்கள் என்ற கணிப்புகள் வரத் தொடங்கி விட்டன.
சமீபத்தில் தான் இந்தியா - இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்தது. இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் விளையாடிய போதும் 2-2 என்ற கணக்கில் தொடரை சமனில் மட்டுமே முடித்தது. இத்தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆஷஸ் தொடருக்கு சிறந்த பயிற்சியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் இறுதியில் இங்கிலாந்து வீரர்களால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போனது. இந்நிலையில் நவம்பரில் தொடங்க உள்ள ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா அணி 5-0 என்ற கணக்கில் வெல்லும் என அந்நாட்டு முன்னாள் வீரர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் பொதுவாக கிரிக்கெட் தொடர்கள் குறித்த கணிப்புகளை சொல்ல மாட்டேன். இப்போது முதன்முறையாக எனது கணிப்பை கூறுகின்றேன் என்றால், அது ஆஸ்திரேலிய பௌலர்களின் மீதுள்ள நம்பிக்கையால் தான். பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜாஸ் ஹேசில்வுட் ஆகிய மூவரின் வேகப்பந்து வீச்சை இங்கிலாந்து சமாளிக்கத் திணறும். மேலும் இவர்களுடன் சுழற்பந்து வீச்சில் நாதன் லயனும் கலக்குவார். ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணியின் முந்தைய டெஸ்ட் போட்டி முடிவுகளை வைத்துப் பார்த்தால், அந்த அணி ஒரு போட்டியில் வெற்றி பெறுவதே அரிது தான். ஆகையால் ஆஸ்திரேலியா 5-0 என்ற கணக்கில் நிச்சயமாக ஆஷஸ் தொடரை வெல்லும்” என மெக்ராத் தெரிவித்துள்ளார்.
1882 ஆம் ஆண்டு தொடங்கிய ஆஷஸ் தொடரில் இதுவரை 72 தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஆஸ்திரேலியா 34 முறையும், இங்கிலாந்து 32 முறையும் தொடரைக் கைப்பற்றியுள்ளன. மேலும் 6 தொடர்கள் சமனில் முடிவடைந்தன. ஒவ்வொரு முறையும் ஆஷஸ் கோப்பையைக் கைப்பற்ற இருநாட்டு வீரர்களும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவார்கள். இம்முறையும் ஆஷஸ் தொடரில் அனல் பறக்கும் என்பதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இத்தொடர் விருந்தாகவே அமையும்.