
நவீன கால கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் தான் பேசுபொருளாக உள்ளது. அதற்கேற்ப ஐபிஎல் தொடர் அதிரடி ஆட்டத்தை ஊக்குவித்து வருகிறது. இதனால் பல இளம் வீரர்கள் தங்களை அதிரடி ஆட்டக்காரர்களாக நிரூபித்து வருகின்றனர். இந்தப் போக்கு டி20 கிரிக்கெட்டிற்கு சாதகமாக இருக்கலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு சவாலானதாகவே இருக்கும். ஏனெனில் அதிரடியாக விளையாடும் வீரர்களால், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுமையாக விளையாட முடியாது. அவ்வகையில் வருங்காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டை இந்தியா எப்படி அணுகும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர் உலகம் முழுக்க பிரபலமாகி உள்ளது. இதனால் பல இளம் வீரர்கள் தங்களுக்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். அதிரடியாக விளையாடினால் மட்டுமே நிலைக்க முடியும் என்ற மனநிலையில் தான் இன்றைய இளம் வீரர்கள் உள்ளனர். அதற்கேற்ப டி20 போட்டிகளில் வெற்றி பெற பெரும்பாலும் அதிரடி ஆட்டம் தான் துணைபுரிகிறது. ஆனால் இதே பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகினால், தோல்வியே மிஞ்சும் என்பது தான் கிரிக்கெட் விமர்சகர்களின் பதில்.
சமீப காலமாக டெஸ்ட் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தைக் கடைபிடித்து வரும் இங்கிலாந்து அணி, அதிக வெற்றிகளைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய இளம் வீரர்கள் பலரும் ஐபிஎல் கிரிக்கெட்டை மட்டுமே உற்று நோக்குகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டைக் காட்டிலும் ஐபிஎல் தொடருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் மேடையாக ஐபிஎல் தொடர் கருதப்படுவது உண்மை தான். ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு தரமான பேட்ஸ்மேன்களை உருவாக்குவது பிசிசிஐ-க்கு கடினமாகி விடும். கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாக விளையாடுவதையே ரசிகர்களும் விரும்புகின்றனர். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளை ரசித்துப் பார்க்கும் ரசிகர்களும் உள்ளனர்.
ஒரு வீரரின் பொறுமை, தன்னம்பிக்கை மற்றும் சுய திறனை சோதிக்கும் போட்டியாக டெஸ்ட் கிரிக்கெட் பார்க்கப்படுகிறது. ஒருநாள் முழுக்க களத்தில் பௌலர்களை எதிர்கொண்டு விளையாடுவது சாதாரண ஒன்றல்ல. அதிரடியாக விளையாடும் வீரர்களுக்கு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவிற்கு திறன் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை அதிரடியாக விளையாடி ரன் சேர்ப்பது முக்கியமல்ல. பௌலர்கள் சோர்வடையும் வரை பேட்டிங் செய்வதே முக்கியம். அதே நேரத்தில் சிறுகச் சிறுக ரன் சேர்க்க வேண்டும்.
கிரிக்கெட்டின் மிக உயர்ந்த வடிவமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்கள் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ரஞ்சி கோப்பை மற்றும் துலீப் கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் தொடர்கள் இந்தியாவில் நடத்தப்பட்டாலும், ஐபிஎல் தொடர் இளம் வீரர்களின் கவனத்தை திசைத் திருப்பி விடுகிறது. இதனால் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் திறனை இந்திய இளம் வீரர்கள் இழக்கின்றனர். தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்று விட்டால், அடுத்து வரும் இளம் வீரர்கள் அவர்களின் இடத்தை கச்சிதமாக நிரப்ப வேண்டியது அவசியம்.
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் நிதானத்துடன் விளையாடியதால் தான் அதிகளவில் ரன்களைக் குவித்தனர். இளம் வீரர்கள் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடுவது போல், டெஸட் போட்டிகளுக்கு ஏற்ப நிதானமாக விளையாடும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு பிசிசிஐ தகுந்த முறையில் வீரர்களை தயார்படுத்த வேண்டியது அவசியமாகும்.