

நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க சுயதொழில் முனைவோர்களை உருவாக்குவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தொழில் முனைவோர்களுக்கு குறைந்த பட்டியலில் மானியத்துடன் கடன் வழங்க, மத்திய அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துகிறது.
இருப்பினும் ஒருசிலருக்கு சரியான நேரத்தில் கடன் கிடைப்பதில்லை போன்ற புகார்கள் இருந்த நிலையில், தற்போது சுயதொழில் தொடங்குவோர்கள் உட்பட ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் கடன் பெற விண்ணப்பிப்பதற்கு தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது மத்திய நிதி அமைச்சகம்.
அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் இனி பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்க, இந்தத் தளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடன் பெறும் செயல் முறையை எளிதாக்கும் வகையில், மத்திய நிதி அமைச்சகம் ‘ஜன்சமர்த் (Jan Sammarth)' என்ற போர்ட்டலில் ‘Startup Common Application Journey’ என்ற பெயரில் இந்த புதிய இணையதளத்தை தற்போது உருவாக்கியுள்ளது. கடனுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பித்தலின் நிலை மற்றும் சலுகைகளை ஒப்பிடுதல் உள்ளிட்ட பல தகவல்களை இந்த இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம்.
சி.ஜி.எஸ்.எஸ்., என்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத திட்டத்தின் படி, இந்த இணையதளத்தின் மூலம் ரூ.20 கோடி வரை கடனைப் பெற முடியும். ஜிஎஸ்டி பதிவு, பான் கார்டு எண் மற்றும் வருமான வரித் தாக்கல் உள்ளிட்ட தரவுகள் இந்தத் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதால், இதன் செயல்பாடு மிக வேகமாகவும், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஸடார்ட்அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தாமதம் இருக்காது. இதுதவிர பெண் சுயதொழில் முனைவோர்களுக்கு சிறப்பு வட்டி சலுகைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக தொழில் தொடங்குபவர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்க உள்ளவர்கள் மற்றும் நிறுவனங்களை மேம்படுத்த நினைப்பவர்கள் என அனைவரும் மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த இணையதளத்தின் வாயிலாக கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
பெண் தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவதால், தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு இதுவொரு நல்வாய்ப்பாக இருக்கும். மத்திய அரசின் இந்த புதிய இணையதளத்தின் மூலம் தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன