
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் ஆன்லைன் முறையிலேயே பின்பற்றப்படுகின்றன. கடன் வழங்குவது முதல் கடனைத் திரும்ப பெரும் நடைமுறைகள் வரை டிஜிட்டல் பயன்பாடு தான் பெரிதும் உதவி வருகிறது. அதோடு பயனாளர்களின் அனைத்து தகவல்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், கடன் வழங்கும் போது அவர்களின் தரவுகளை நிதி நிறுவனங்கள் ஆராய எளிமையாக உள்ளது. இதனால் கடன் வழங்கும் காலமானது நாட்களில் இருந்து சில நிமிடங்களாக குறைந்துள்ளது.
டிஜிட்டல் யுகத்தின் மிகப்பெரிய பயன்பாடு என்று இதனை சொல்லலாம். இந்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வெறும் 25 முதல் 26 நிமிடங்களிலேயே கடன் வழங்க முடியும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் சல்லா ஸ்ரீனிவாசலு செட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் 27 வது தலைவராக ஸ்ரீனிவாசலூர் செட்டி பதவியேற்றார். இவர் பதவியேற்ற பின்பு எஸ்பிஐ வங்கியின் கடன் வழங்கும் விகிதம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமே டிஜிட்டல் பயன்பாடு தான் என்று இவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மும்பையில் நேற்று தொடங்கிய உலகளாவிய பிரிண்டர் திருவிழாவில் சல்லா ஸ்ரீனிவாசலு செட்டி பங்கேற்று பேசினார். அப்போது சிறு, குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எஸ்எம்இ கடன்களை சில நிமிடங்களிலேயே வழங்க முடியும் என பெருமிதத்துடன் கூறினார்.
இது குறித்து எஸ்பிஐ தலைவர் செட்டி மேலும் கூறுகையில், “இந்தியாவின் நிதித் துறையில் டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பயனாளர்களின் தரவுகளை வெகுவிரையில் கண்டறிந்து சில நிமிடங்களிலேயே கடனை வழங்க முடியும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் வாடிக்கையாளர்கள் ரூ.5 கோடி வரையிலான கடனைப் பெற இனி 25 முதல் 26 நிமிடங்களே போதும்.
அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் கடனுக்கான ஒப்புதலை விரைந்து பெற முடிகிறது. இதற்கு மிக முக்கிய காரணமே நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பான டிஜிட்டல் கட்டமைப்புகள் தான்.
இன்றைய சூழலில் காப்பீடு மற்றும் முதலீடு போன்றவற்றில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்தி வந்தாலும், தொழில் வாயிலாக கடன் வழங்குவதை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது. பின்டெக் நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் ஆகியவை ஒன்றாக இணைந்து, எஸ்எம்இ கடன்களை நம்பகத்தன்மையுடன் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்எம்இ கடன்களை விரைந்து வழங்க ஜிஎஸ்டி, யுபிஐ பணப் பரிமாற்றம் மற்றும் வருமான வரி கணக்குத் தாக்கல் போன்ற விரிவான தரவுகளை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பயன்படுத்தி வருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.