அமெரிக்காவில் அடுத்தடுத்து விமான விபத்து…. குடியிருப்பு பகுதியில் விழுந்த விமானம்!
அமெரிக்காவில் தொடர்ந்து விமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில் நேற்று இரவு சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விமான விபத்துக்கள் சமீபத்தில் அதிகமாகி வருகின்றன. அந்தவகையில் அமெரிக்காவில் பயணிகள் விமானம், ராணுவ பயிற்சி ஹெலிகாப்டருடன் மோதிய விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று பேர் மற்றும் பயணிகள் விமானத்தில் பயணம் செய்த 64 பேர் என மொத்தம் 67 பேர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் வெள்ளை மாளிகை அருகே இருக்கும் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது திடீரென பாதை மாறியதாகவும் ஹெலிகாப்டர் மீது மோதியதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
அதில் விமானம் செய்த அத்தனை பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டிற்கு பிறகு அமெரிக்காவில் நடந்த மிகவும் மோசமான விமான விபத்து இதுவே ஆகும். இதனால், அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இப்படியான நிலையில், நேற்று இரவு ஒரு விபத்து ஏற்பட்டது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.30 மணியளவில் லியர்ஜெட் 55 என்ற விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட்-பிரான்சன் தேசிய விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென்று குடியிருப்பு பகுதிகளில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஆனால், குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறியதால், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படித் தொடர்ந்து அடுத்தடுத்து விமான விபத்து ஏற்படுவது உலக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மக்களை பதற்றமடைய வைத்திருக்கிறது.