
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால் போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. இதற்காக சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. மேலும் இதற்கு ஆதார் மற்றும் வாக்காளர் அட்டையைப் பயன்படுத்தக் கூடாது எனவும் நிபந்தனை விதித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆதார் அட்டையை மத்திய அரசு அறிமுகப்படுத்திய பிறகு பல இடங்களில் ஆதார் தான் பிரதான அடையாளமாக இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஆதாரை குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது என்று அறிவித்ததை எதிர்த்து ஒரு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போதும் கூட ஆதாரை ஆவணமாக ஏற்க மாட்டோம். இதன் மூலம் பல போலி வாக்காளர்களை நீக்க முடியும் என தேர்தல் ஆணையம் உறுதியாக பதிலளித்தது. ஒருவேளை 1 கோடிக்கும் மேலான வாக்காளர்களை நீக்கினால் நாங்கள் இந்த விவகாரத்தில் நிச்சயமாக தலையிடுவோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாமில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி 65 இலட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 2003க்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் இணைந்தவர்கள் அனைவருமே தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 7 கோடியே 90 இலட்சம் வாக்காளர்களில், 7 கோடியே 24 இலட்சம் பேர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஒரு கோடி வாக்காளர் இழப்பு என்ற கணிப்பு நொறுக்கப்பட்டது.
ஆகையால் தேர்தல் ஆணையம் கூறியது போலவே ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆதாரமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவு சரிதான் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.
ஒரு தொகுதியில் 12 பேர் உயிரிழந்ததாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த 12 பேரும் உயிருடன் இருப்பதை சுட்டிக் காட்டினார் மூத்த வக்கில் கபில் சிபில். வரைவு வாக்காளர் பட்டியலில் சிறுசிறு தவறுகள் நடப்பது இயல்பு தான். இறுதிப் பட்டியலில் அனைத்து தவறுகளும் சரிசெய்யப்படும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கின் விசாரணை இன்றும் (புதன்கிழமை ஆகஸ்ட் 13) நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.