ஆதார் கார்டு நம்பகமான ஆவணம் இல்லையா? என்ன சொல்கிறது தேர்தல் ஆணையம்!
பீகார் மாநிலத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கீழ் வாக்காளர் பட்டியலை மறுசீரமைத்து வருகிறது. 2003 ஆம் ஆண்டுக்குப் பின் சுமார் 22 ஆண்டுகள் கழித்து அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு இறுதியில் பீகாரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்குள் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முடிக்க தேர்தல்ல ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவதால், பீகார் மக்கள் தாங்கள் இந்தியர்கள் தான் என்பதை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் இதற்கு ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் மட்டும் போதாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் நம்பத்தகுந்த கூடுதல் ஆவணங்களான பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகலை கூடுதலாக பொதுமக்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்படும். இதனை எதிர்த்து தன்னார்வ அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை நம்பத்தகுந்த ஆவணமாக பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் குடியுரிமையையும் சரிபார்க்க வேண்டிய கட்டாயமும், அதிகாரமும் தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. அரசியலமைப்புச் சட்டம் 326, பொதுமக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 இன் 16 மற்றும் 19வது பிரிவுகளின் படி, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.
நாட்டில் போலி குடும்ப அட்டைகள் கோடிக்கணக்கில் இருப்பதால் இதனை ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது. வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பொதுமக்களின் வாக்காளர் அடையாள அட்டையை நம்பத்தகுந்த ஆவணமாக ஏற்க முடியாது. ஏனெனில் வாக்காளர் பட்டியலே தற்போது முற்றிலுமாக மாற்றப்பட இருக்கிறது.
மேலும் வசிப்பிடம் மற்றும் குடியுரிமைக்கு ஆதார் கார்டு ஆதாரம் இல்லை என சட்டம் 2016 இல் உள்ள 9வது பிரிவு கூறுகிறது. இந்நிலையில் எப்படி இந்த ஆவணங்களை நம்பத்தகுந்த ஆவணங்களாக பரிசீலிக்க முடியும். ஆகையால் இந்தியக் குடியுரிமையை சரிபார்க்க பிறப்புச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்கள் அவசியம்.
வாக்காளர் பட்டியலில் தகுதியற்ற வாக்காளர்களை நீக்கி, தேர்தலை நேர்மையுடன் நடத்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் உதவியாக இருக்கும்” என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.