

இந்தியாவில் தனிநபர் அடையாள அட்டைகளில் முதன்மையானதாக ஆதார் அட்டை இருக்கிறது. அரசுத் திட்டங்களில் பயன்பெறவும், ஆன்லைன் சேவைகளைப் பெறவும் ஆதார் கார்டு இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில் ஆதார் கார்டை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும்? எதற்கெல்லாம் பயன்படுத்தக் கூடாது என்ற வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் நடந்து முடிந்தது. இந்தத் திருத்தத்தின் போது வாக்காளர்கள் ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அப்போதும் ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆதாராமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் மறுத்தது.
ஆதார் அட்டை என்பது தனிநபர் அடையாள அட்டை மட்டுமே; குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல என தேர்தல் ஆணையம் தனது வாதத்தை முன்னெடுத்தது.
புதிய வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கும், கேஒய்சி சரிபார்ப்பதற்கும், புதிய சிம் கார்டு வாங்குவதற்கும், வருமான வரித் தாக்கல் செய்வதற்கும், மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டிற்கும் பொதுமக்கள் ஆதார் கார்டைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும், அரசு நலத்திட்டங்கள் மற்றும் மானியத் திட்டங்களில் பயன்பெறவும் ஆதார் கார்டைப் பயன்படுத்தலாம்.
இந்நிலையில் எதற்கெல்லாம் ஆதார் கார்டு பயன்படாது மற்றும் பயன்படுத்தக் கூடாது என்பது பற்றி பொதுமக்களுக்கு நீண்ட காலமாகவே குழப்பம் இருந்து வந்தது. இந்நிலையில் பீகாரில் ஆதார் கார்டை குடியுரிமை ஆவணமாக ஏற்க மாட்டோம் என தேர்தல் ஆணையம் கூறியதால், பொதுமக்களின் குழப்பம் மேலும் அதிகமானது.
குடியுரிமை மற்றும் வசிப்பிடச் சான்றுக்கு ஆதார் கார்டு ஏற்றுக் கொள்ளப்படாது. இதுதவிர பிறந்த தேதிக்கான சான்றாகவும் ஆதார் கார்டைப் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் பலருடைய பிறந்த தேதி ஆதார் கார்டில் தவறாக இருப்பதால், துல்லியமான பிறந்த நாளை ஆதார் கார்டைக் கொண்டு உறுதி செய்யக் கூடாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த, அனைத்து அஞ்சல் அலுவலங்களிலும் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்றைய சூழலில் பல்வேறு நிதிப் பரிமாற்றங்களில் ஆதார் கார்டு முதன்மை ஆதாராமாக பயன்படுகிறது. இந்நிலையில் எதற்கெல்லாம் ஆதார் கார்டைப் பயன்படுத்த முடியாது என்பது குறித்த தகவல் வெளியாகி இருப்பதால், இனி பொதுமக்களுக்கு இதுகுறித்த குழப்பங்கள் நீங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆதார் கார்டில் மொபைல் எண் இணைத்தல், பிறந்த தேதி மற்றும் முகவரியை அப்டேட் செய்வது அவசியமாகும்.