

தகவல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பம் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில், ஆதார் கார்டு சேவையிலும் இதனைப் பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘ஆதார் விஷன் 2032’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் பிளாக்செயின் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு நிறைந்த டிஜிட்டல் சேவைகளை வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதில் தனிநபர் தரவுகள் பாதுகாப்பான முறையில் கையாளப்படும்.
மத்திய அரசின் ‘ஆதார் விஷன் 2032’ திட்டம், ஆதார் சேவையை அடுத்த தலைமுறைக்கு தயார்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் அடையாள மேலாண்மை அமைப்பை காலத்திற்கேற்றவாறு 2032 ஆம் ஆண்டுக்குள் நவீனப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் சைபர் பாதுகாப்பு மோசடிகள், டிஜிட்டல் அரெஸ்ட் மற்றும் தனிநபர் தரவுகள் திருடப்படுவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் நடக்கின்றன. இதிலிருந்து ஆதார் அமைப்பை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு ‘ஆதார் விஷன் 2032’ என்ற திட்டம் ஆதார் சேவையை மறுவரையறை செய்யும்.
1. ஏஐ: செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அங்கீகாரம் கொண்ட அமைப்புகளின் துல்லியத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, மோசடிகளைக் குறைக்கவும் முடியும்.
2. குவாண்டம் கம்ப்யூட்டிங்: எதிர்காலத்தில் வரக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து ஆதார் அமைப்பைப் பாதுகாப்பதே குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் வேலை.
3. பிளாக்செயின்: தரவுகள் சரிபார்ப்பை பாதுகாப்பானதாக மாற்றவதற்கு பிளாக்செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இது வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும்.
இந்த 3 அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்தும் போது, ஆதார் சேவை அதிக பாதுகாப்பு நிறைந்ததாக மாறும். மாபெரும் டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி பயணிக்கும் மத்திய அரசின் இந்தப் புதிய திட்டத்திற்கு, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உயர் நிலை நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்தக் குழுவிற்கு ஆதார் அமைப்பின் தலைவர் நீலகண்ட மிஸ்ரா தலைமை வகிக்கிறார். சட்டம், தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, பொது நிர்வாகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இந்தக் குழுவில் உள்ளனர்.
இந்தியாவில் ஆதார் கார்டு முக்கியமான தனிநபர் அடையாள அட்டையாக இருக்கிறது. இதன் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த புதிய திட்டம் உலகளாவிய டிஜிட்டல் யுகத்தில், ஒரு புதிய மைல் கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தற்போதைய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இந்தத் திட்டத்திற்கு பெரும்பங்காற்ற உள்ளது.