

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனின் அன்றாட வாழ்விலும் பிரிக்க முடியாத அங்கமான 'ஆதார்' கார்டு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணாகும். ஆதார் கார்டு என்பது தற்போது இந்தியாவில் இந்த முகவரியில் வசிக்கிறோம் என்பதற்கான அடையாள ஆவணம் மட்டுமே.
இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரமாகச் செயல்படும் ஆதார் கார்டு பத்திரபதிவு முதல் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவது வரை என அனைத்து இடங்களிலும் முன்னிலைப்படுத்தப்படுகிறது. அதேபோல் வங்கி முதல் டிக்கெட் பதிவு வரை எங்கே சென்றாலும், நம்மிடம் கட்டாயம் கேட்கப்படும் ஒரு ஆவணம் - ஆதார் கார்டு அல்லது ஆதார் கார்டு எண்.
இந்தியாவில் வசிக்கும் எவரொருவரும் கட்டாயம் ஆதார் கார்டு பெற்றிருக்க வேண்டும். அதேசமயம் வெளிநாட்டினர் கூட சரியான ஆவணங்களைக் கொடுத்து இந்தியாவில் ஆதார் கார்டை பெற முடியும். ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான் - குறிப்பிட்ட அந்த நபர் 182 நாள்கள் அல்லது அதற்கு மேல் இந்தியாவில் தங்கியிருக்கும்பட்சத்தில் அவர் அட்டை பெற தகுதியுடையவரார்.
ஆதார் கார்டை வெறுமனே குடியுரிமைக்கான ஆவணம் இல்லை என்று மட்டும் சொல்லிவிட முடியாது. பெயர், பிறந்த தேதி, முகவரி, பாலினம், புகைப்படம், கைரேகைகள், கருவிழி உள்ளிட்ட தகவல்கள் மூலம் ஒரு குடியிருப்பாளரை ஆதார் அடையாளம் காட்டுகிறது. ஆதார் என்பது ஒரு அடையாளங்காட்டியாக விளங்குகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு, இதுகுறித்து ஆணையம் அளித்த விளக்கத்தில், ஆதார் என்பது ஒரு அடையாள அட்டை மட்டுமே அதனை பிறந்த தேதிக்கு சான்றாக அமையாது என அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
அதாவது, ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், ஒருவரின் பிறந்த தேதிக்குரிய செல்லுபடியாகும் சான்றாக ஏற்றுக்கொள்ள இயலாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு நடைமுறைகளில் இந்த ஆவணத்தின் சட்டரீதியான அந்தஸ்து குறித்து நிலவி வரும் குழப்பங்களுக்கு மத்தியில், ஆதார் அட்டையை வழங்கும் இந்த அமைப்பு இத்தெளிவுரையை வழங்கியுள்ளது.
ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள பிறந்த தேதியின் துல்லியம் குறித்து ஏதேனும் சர்ச்சை எழும் பட்சத்தில், அதை நிரூபிக்கும் பொறுப்பு (burden of proof) அந்த ஆதார் எண் வைத்திருப்பவரையே சாரும்… ஒரு தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த, அங்கீகாரச் செயல்முறைக்கு உட்பட்டு ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம்; இருப்பினும், அதுவே தனித்து நின்று பிறந்த தேதிக்குச் சான்றாக அமையாது என்று UIDAI திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
2016-ஆம் ஆண்டின் ஆதார் சட்டம், ஆதாரை ஒரு அடையாளச் சான்றாகத் தெளிவாக அங்கீகரிக்கிறது; ஆனால், பிறந்த தேதியைச் சரிபார்ப்பதற்கான அங்கீகாரத்தை அது வழங்குவதில்லை என்பதை இந்தத் தெளிவுரை சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக, வயதுச் சரிபார்ப்பு தேவைப்படும் சமயங்களில், தனிநபர்கள் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.