.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரயில் போக்குவரத்தையே அதிகம் நம்பியுள்ளனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்ல, ரயில் பயணத்திற்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
பொதுவாக விரைவு ரயில்களுக்கான முன்பதிவு, ரயில் புறப்படும் நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விடும். இடைத்தரகர்கள் பலரும் ரயில் டிக்கெட்டுகளை அதிகளவில் முன்பதிவு செய்து, அதனை பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் சார்பில் அதிக அளவில் புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என ரயில்வே துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தது. இந்நிலையில் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் என இன்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சரியான பயணிகளுக்கு முன்பதிவு டிக்கெட் ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் அனைவரும், ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகிறது. ரயில்வே துறையின் அறிவிப்பு படி, வருகின்ற ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஆதார் சரிபார்க்கப்பட்ட பயணிகள் மட்டுமே விரைவு ரயில்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.
ஏற்கனவே தட்கல் டிக்கெட் வாங்கவும் ஆதார் கட்டாயம் என்ற சூழலில், தற்போது வழக்கமான ரயில் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாக உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இடைத்தரகர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய நடைமுறை, நாளை மறுதினம் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. அதன்பிறகு, வருகின்ற ஜனவரி 12-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
IRCTC இணையதளத்தில் காலை 8 மணி முதல் 10 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. இந்த விதிமுறையில் மேலும் திருத்தத்தைக் கொண்டு வரும் விதமாக, தற்போது வழக்கமான முன்பதிவு டிக்கெட் முறையிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு டிக்கெட் நடைமுறையில் முறைகேடுகளை தவிர்க்கவும், இடைத்தரகர்களை அறவே நீக்கவும் ஆதாரை கட்டாயமாக்கி உள்ளது ரயில்வே.
ரயில்வே கவுண்டர்களில் முன்பதிவு டிக்கெட்டைப் பெற, பயணிகள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்தால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அடுத்த 5 ஆண்டுகளில் சென்னை, மும்பை, டெல்லி, பூரி, திருப்பதி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 48 நகரங்களில் ரயில் சேவையை இரட்டிப்பாக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதன்படி வருகின்ற 2030 ஆம் ஆண்டுக்குள், ரயில்வே சேவையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் 48 நகரங்களில் ரயில்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தப்பட உள்ளது.