

பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தவறவில்லை. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை பயணிகள் யாரும் ரயில்களில் எடுத்து செல்லக் கூடாது என்ற விதிமுறையை ரயில்வே நிர்வாகம் கடுமையாக பின்பற்றி வருகிறது.
சமீபத்தில் கூட ரயில்களில் கற்பூரம் ஏற்றக்கூடாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தண்ணீரை சூடாக்கப் பயன்படும் ‘எலக்ட்ரிக் கெட்டிலை’ ரயில்களில் பயன்படுத்தக் கூடாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மீறினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
விரைவு ரயில்களில் லேப்டாப், மொபைல் போன், ப்ளூடூத் ஹெட்செட் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சார்ஜ் போடுவதற்கு சார்ஜ் ‘பாயிண்டுகள்’ உள்ளன. ஆனால் இந்த சார்ஜ் பாய்ண்டுகளை பயணிகள் சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதாக ரயில்வே துறைக்கு புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து ரயில்களில் சார்ஜ் பாய்ண்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, ரயில்வே பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில், “ரயில்களில் உள்ள சார்ஜ் பாய்ண்டுகளில் மொபைல் போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட பாதுகாப்பான சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் ஒரு சில பயணிகள், எலக்ட்ரிக் கெட்டில் எனப்படும் தண்ணீரை சூடுபடுத்தும் மின்சாதனத்தைப் பயன்படுத்தி டீ மற்றும் காபி போடுவதாக ரயில்வே துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இது மாதிரியான செயல்கள் மற்ற பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி விடும்.
சமீபத்தில் மகாராஷ்டிராவில் ஓடும் விரைவு ரயிலில் பெண் ஒருவர் எலக்ட்ரிக் கெட்டிலை பயன்படுத்தி நூடுல்ஸ் செய்து சாப்பிட்டார். அவர் இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ரயில்வே விதிமுறைகளை மீறியதற்காக அவர் மீது மத்திய ரயில்வே துறை சட்டப்படியான நடவடிக்கையை எடுத்தது.
இந்நிலையில் இனி ரயில்களில் உள்ள சார்ஜ் பாய்ண்டுகளில் எலக்ட்ரிக் கெட்டிலை பயன்படுத்தினால் ரூ.1,000 அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். ஒரு சில நேரங்களில் அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையும் விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக எளிதில் தீப்பற்றக்கூடிய கேஸ் சிலிண்டர், பட்டாசுகள், அமிலங்கள், மண்ணெண்ணெய் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட பொருள்களை பயணிகள் ரயில்களில் எடுத்து செல்லக்கூடாது. ரயில்களில் புகை பிடிப்பது கூட தண்டனைக்குரிய குற்றம் தான்.
ரயில்வே விதிமுறைகளை மீறும் ஒரு சில பயணிகள், மற்ற பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவராகவே கருதப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் சீசன் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்கள் ரயில்கள் மூலமாகவும் பம்பைக்கு செல்கின்றனர். பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, ஐயப்ப பக்தர்கள் ரயில்களில் செல்லும்போது கற்பூரம் ஏற்ற கடந்த சில நாட்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.