
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் மாற்றுத்திறனாளிகள் தேசிய செயல் திட்டம் (NAP-SDP). சக மனிதர்களின் திறன்களை வளர்ப்பது போலவே, மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக தொழிற்பயிற்சி வழங்கப்படுவது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில் தற்போது இத்திட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஆதார் கார்டு அறிமுகமான பின்பு மிக முக்கிய தனிநபர் அடையாள ஆவணமாக இது பார்க்கப்படுகிறது. அவ்வகையில் மாற்றுத்திறனாளிகள் தேசிய செயல் திட்டத்தில் பயனடைய வேண்டுமெனில் ஆதார் கார்டு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவரின் திறன்களையும் கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அரசு சார்ந்த நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலம் முடிந்த பிறகு சுயதொழில் அல்லது வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய இத்திட்டம் உதவுகிறது. மாற்றுத்திறனாளிகள் தேசிய செயல் திட்டத்தின் கீழ் போக்குவரத்து செலவு மற்றும் தங்குமிட செலவு உள்ளிட்ட பல பணப்பலன்களைப் பெற ஆதார் கார்டை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதற்கான அறிவிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தற்போது அரசிதழில் வெளிட்டுள்ளது.
ஆதார் கார்டு இல்லாத மாற்றுத்திறனாளிகள் விரைந்து விண்ணப்பிக்க இந்தியா முழுக்க ஆங்காங்கே ஆதார் சேவை முகாம்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் கார்டு இல்லாத மாற்றுத்திறனாளிகள் ஆதாருக்கு விண்ணப்பித்த ஆவணத்தைக் கூட ஆதாரமாகப் பயன்படுத்தி இத்திட்டத்தில் பயன்பெறலாம். இதுதவிர தங்களுக்கான ஆதார் கார்டு கிடைக்கும் வரை பள்ளி சான்றிதழ்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆதார் எண் ஒதுக்கப்பட்ட பிறகு கண்டிப்பாக ஆதார் கார்டை இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.