

சாலைப் போக்குவரத்தில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளை குறைக்கவும் ‘ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை (ABS)’ வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு தயாரிக்கப்பட உள்ள அனைத்து இருசக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் இருப்பதை வாகன உற்பத்தி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் 125சிசி-க்கும் குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தை அமைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என வாகன நிறுவனங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசமும் கிடையாது என இந்த கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு.
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்தால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க வாகன உற்பத்தி நிறுவனங்களால் முடியும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் ஓட்டுநர் பாதுகாப்பு விதிமுறைகளை மாற்றியமைக்க முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் வாகனங்களில் 85% வரை 125சிசிக்கும் குறைவான வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏபிஎஸ் பிரேக்கிங் அமைப்பால் வாகன நிறுவனங்களுக்கு ரூ.5,000 முதல் ரூ6,000 வரை செலவு அதிகமாகும் எனத் தெரிகிறது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் வாகன விற்பனை வெகுவாக பாதிக்கப்படும் என வாகன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் ஏபிஎஸ் அமைப்பால் ஏற்படும் கூடுதல் செலவை சமாளிக்க, வாகனங்களின் விலையை முன்பே திட்டமிடும்படி வாகன நிறுவனங்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு தற்போது புதிய ஜிஎஸ்டி முறை அமலுக்கு வந்துள்ளதால், வாகனங்களின் விலையில் கணிசமான தொகை குறைந்துள்ளது. ஆகையால் ஏபிஎஸ் அமைப்பை பொருத்துவதில் வாகன நிறுவனங்களுக்கு பெரிதாக சிக்கல் இருக்காது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
125சிசி பிரிவில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் ஹீரோ மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்கள் ஏபிஎஸ் அமைப்பால் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்திற்கு பதிலாக ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் குறைந்த செலவிலான ‘காம்பி பிரேக்’ சிஸ்டத்தை பயன்படுத்தலாம் என வாகன நிறுவனங்கள் நினைக்கின்றன. காம்பி பிரேக் என்பது பின்புறம் பிரேக்கை அழுத்தினால், இருபுறமும் பிரேக் பிடிக்கப்படும்.
வாகன நிறுவனங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்த நிலையில், 2026 ஜனவரி முதல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது. ஓட்டுநர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பங்காற்றுகிறது. திடீரென பிரேக் அடிக்கும் போது இரண்டு சக்கரங்களும் லாக் ஆகாமல் இருப்பதோடு, வாகனம் கீழே விழுவது தடுக்கப்படும்.
சக்கரத்தில் சென்சார் மற்றும் எலக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் ஆகியவை இருப்பதால், வாகனம் எப்போதும் ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதை ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உறுதி செய்யும்.