
நாட்டில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது ஜிஎஸ்டி குறைப்பால், பைக்குகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் வாகன விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. அதேசமயம் நம்பர் பிளேட்டை மறைத்துக் கொண்டு, சிலர் வாகனங்களை ஓட்டுவது காவல் துறைக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
பொதுவாக இருசக்கர வாகனத்தின் முன் மற்றும் பின்புறம் என இரண்டு பக்கமும் நம்பர் பிளேட் இருக்கும். இந்த நம்பர் பிளேட்டில் உள்ள பதிவெண் நன்றாக தெரியும்படி இருத்தல் வேண்டும். அப்படி இல்லையெனில் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என பெங்களூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் நம்பர் பிளேட்டை மறைத்துக் கொள்ளவும் அல்லது போலியான நம்பர் பிளேட்டை வைத்துக் கொள்ளவும் முயற்சிப்பார்கள். இது காவல்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால், கடுமையான நடவடிக்கையை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபடும் போது, தெளிவற்ற நம்பர் பிளேட்டுடன் சிலர் வாகனம் ஓட்டுவதாகவும், சிலர் போலியான நம்பர் பிளேட்டை வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
தற்போதைய சூழலில் அனைத்து சிக்னல்களிலும் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நம்பர் பிளேட்டுகள் மறைக்கப் பட்டால், அவை கேமராவில் பதிவாகாது. கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்றச்செயல்களுக்கு திருட்டு வண்டிகள் தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாக பெங்களூர் காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி இனி நம்பர் பிளேட்டில் உள்ள பதிவெண் தெளிவாக தெரியவில்லை என்றால் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும். ஒருவர் செய்யும் தவறால் அனைவருக்கும் பிரச்சினை தான். இருப்பினும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுப்பதில் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது.
நமப்ர் பிளேட்டில் வண்ணங்களைப் பூசியும், துணிகளால் கட்டியும் விடுவதால் ஏஐ கேமராவில் அடையாளம் காண முடியாமல் போகிறது. அதோடு சிலர் நம்பர் பிளேட்டை வாகனத்தில் மாட்டுவதில்லை. இதனால் இவர்கள் மீது போக்குவரத்து விதி மீறல் வழக்கைத் தொடர காவல்துறை முன்வந்துள்ளது.
ஆகையால் வாகன ஓட்டிகள் பலரும் உடனே தங்களுடைய நமபர் பிளேட்டை சட்டப்படியாக திருத்திக் கொள்ள வேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது. நம்பர் பிளேட்டை மறைத்த வழக்கில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் சுமார் 1,200 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விரைவில் நம்பர் பிளேட்டை ஒழுங்காக பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவு தமிழ்நாட்டிலும் வரும் எதிர்பார்க்கப்படுகிறது