
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்க்ரா பகுதியில் உள்ள சக்கி நதிப் பாலத்தின் மீது இரயில் சென்று கொண்டிருந்த போது பாலத்தின் தாங்கு சுவர்கள் இடிந்து விழுந்தன. இந்த விபத்து பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளாக இரயில் விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மீண்டும் இரயில்வே பாலத்தின் தாங்கு சுவர்கள் இடிந்து விழுந்த நிகழ்வு இரயில்வே துறைக்கு சவால் அளிக்கும் படியாக அமைந்துள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். இதுதவிர மண் சரிவுகள் ஆங்காங்கே ஏற்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் காங்க்ரா பகுதியில் சக்கி நதியின் மீது இரயில்வே பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் தான் ஜம்மு-காஷ்மீரையும், கன்னியாகுமரியையும் இணைக்கும் முக்கியமான பாலம். இந்தியாவின் கடைகோடி நகரங்களை இணைக்கும் முக்கிய பாலம் என்பதால் தான், தற்போது இப்பாலத்தின் தாங்கு சுவர்கள் இடிந்து விழுந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இரயில் மிதவேகத்துடன் சக்கி நதிப் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது. அப்போது நதியின் கரையோரங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாலத்தின் 4 தாங்கு சுவர்கள் உடைந்து சேதமடைந்தன. இருப்பினும் இரயில் பாதுகாப்பாக பாலத்தைக் கடந்து விட்டதால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கு சுவர்கள் உடைந்தாலும் பாலம் உறுதியாக நின்றதால், ஒரு மிகப்பெரிய பேரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக இரயில்வே தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் பாலத்தின் அடிப்பகுதி பெரும்பாலும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகளை சுமந்து சென்ற இரயில், பாலத்தின் மீது மெதுவாக செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தாங்கு சுவர்கள் இடிந்த பிறகும் பாலத்தின் மீது இரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இருப்பினும் பாலத்தின் உறுதி குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. எப்போது வேண்டாமானாலும் பாலம் இடிந்து விழ வாய்ப்புள்ளது என்பதால், பாலத்தை விரைந்து சீரமைக்க இரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் சீரமைப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் அவசர காலங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது.