
இந்தியாவில் சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சாலைகள் தரமாக இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள சாலைகளை தரம் உயர்த்த விபத்தில்லா சாலைகள் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இத்திட்டத்தின் படி அதிக விபத்துகள் நடந்துள்ள சாலைகளை முதலில் சீரமைத்து, தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சீரமைக்கப்படவுள்ள சாலைகளின் பட்டியல் தயாராகியுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் முக்கியமான 4 சாலைகளை சீரமைக்க ரூ.117 கோடியை ஒதுக்கியுள்ளது தேசிய நெடுஞ்சாலைத் துறை.
1. மதுரை - கயத்தாறு NH-44 சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், இந்த சாலைக்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலைத் துறை இந்த சாலையை மேம்படுத்த அதிகபட்சமாக ரூ.111 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. சாலையை விரிவாக்கம் செய்யவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு சுரங்கப் பாதைகளைக் கட்டவும் அரசு திட்டமிட்டுள்ளது. இங்கு சாலை விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
2. செங்கப்பள்ளி - நீலாம்பூர் மற்றும் மதுக்கரை - வாலையார் இடையேயுள்ள NH-544 சாலையை தரம் உயர்த்த ரூ.5.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் கட்டவும், சாலை சந்திப்புகளை மறு வடிவமைப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
3. பொள்ளாச்சி - கோயம்புத்தூர் NH-83 சாலையில் இருக்கும் வளைவுகளை சரிசெய்தால், பல விபத்துகளைத் தவிர்க்க முடியும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் சாலை வளைவுகளை சீரமைக்கவும், சேதமடைந்த சாலைகளை சீர்படுத்தவும் ரூ.54 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
4. சென்னை -தடா செல்லும் NH-16 சாலையை தற்காலிகமாக சீரமைக்க ரூ.45 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் 90-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடப்பதால், இப்பகுதியில் இருக்கும் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும். அதோடு இது தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதி என்பதால் கூடுதல் கவனம் கொடுக்கப்படுகிறது. குறுகலான சாலைகளை விரிவாக்கம் செய்யவும், வேகத்தடைகளை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. மேலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் இங்கு ஒட்டப்படும்.
கடந்த 2023 இல் 20,582 சாலை விபத்துகள் இந்தியாவில் நடந்துள்ளன. இதில் 13% விபத்துகள் தமிழ்நாட்டில் நடந்தவை. இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்து, தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் சாலை விபத்துகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை மும்மரமாக செயல்பட்டு வருகிறது.