
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் மூலம் குறைந்த விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளின் மூலம் ஜவ்வரிசியை விற்பனை செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டும், இன்னும் ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி விற்பனை செய்யப்படவில்லை.
நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. இருப்பினும் ஜவ்வரிசியின் விலை குறைவதால், இதன் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கின் விலையும் குறைந்து விடுகிறது. இதனால் மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலையின்றி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளின் மூலம் ஜவ்வரிசியை வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் சேலம் சேகோ சர்வ் செயலாட்சியரான கீர்த்தி பிரியதர்ஷினி, தொழில் துறை வணிக இயக்குநருக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதினார். இந்தக் கடிதத்தில், “பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியால் செய்யப்பட்ட உணவுகளைக் கொடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு ரேஷன் கடைகள் மற்றும் ஆவின் பாலகங்களில் ஜவ்வரிசியை விற்கவும் விரைவில் அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படும். இதுதவிர ஆவின் பாலகங்கள் வாயிலாகவும் ஜவ்வரிசியை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என எழுதியிருந்தார்.
ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவரான சங்கரய்யா கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு புத்தகத் திருவிழா நடந்த போது, ஜவ்வரிசியால் செய்யப்பட்ட 60-க்கும் மேற்பட்ட உணவுகள் வழங்கப்பட்டன. இந்த உணவுகள் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் ஜவ்வரிசி விற்பனையைத் தொடங்க அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் ரேஷன் பொருட்களில் ஜவ்வரிசியும் இணையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடையில் ஜவ்வரிசியை அரசு வழங்கினால், விவசாயிகளுக்கும் இலாபம் கிடைக்கும்; தமிழக அரசுக்கும் இலாபம் கிடைக்கும் என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மரவள்ளிக் கிழங்கு விவசாயத்தின் பரப்பளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.