

ஈபிஎஃப்ஓ 3.0(EPFO 3.0) திட்டத்தின் மூலம் நம்முடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் எளிதாக ATM அல்லது UPI மூலம் எடுத்துக் கொள்ளும் வசதி கொண்டுவரப்பட இருக்கிறது. இந்த புதிய வசதி, பழைய படிவங்கள் நிரப்பும் முறையை விட விரைவாக, சில நாட்களிலேயே பணத்தை எடுக்க அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய சம்பளதாரர்களுக்கு ஈபிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையானது ஊழியர் சார்பிலும் அவர் வேலை செய்யும் நிறுவனம் சார்பிலும் வரவு வைக்கப்படும். ஊழியர் ஓய்வு பெறும் போது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கலாம் அந்த சமயத்தில் நிம்மதியான ஓய்வு காலத்தை அனுபவிக்க இந்த தொகை அவர்களுக்கு உதவும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
நீங்கள் வேலையில் இருந்தால் அல்லது வேலையை விட்டு விலகி ஒரு மாதம் ஆகியிருந்தால் 75% வரை எடுக்கலாம், 2 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டால் முழு தொகையையும் எடுக்கலாம்.
பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுப்பது என்பது மிகப்பெரிய நடைமுறைகளைக் கொண்டது. அதற்கு ஒப்புதல் கிடைப்பதற்கு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தான் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பது எளிதாக்கும் வகையிலான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ஈபிஎஃப்ஓ 3.0 என்ற திட்டத்தின் மூலம் நம்முடைய பிஎஃப் கணக்குகள் மேலாண்மை செய்யப்படும் விதமே பெரிய அளவில் மாற்றம் அடைய இருக்கிறது.
ஈபிஎஃப்ஓ 3.0(EPFO 3.0) திட்டத்தின் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருக்கக் கூடிய 9 கோடி உறுப்பினர்கள் இனி தங்களுடைய பிஎஃப் பணத்தை எளிதாக ATM அல்லது UPI மூலம் எடுத்துக் கொள்ளலாம். எப்படி ATM அட்டையை பயன்படுத்தி பணத்தை எடுக்கிறோமோ அதே போல ஈபிஎஃப் வழங்கக்கூடிய அட்டையை பயன்படுத்தி நாம் எளிதாக பணத்தை எடுக்க முடியும். இவ்வாறு எளிதாக பணம் எடுக்க விரும்பிம் PF உறுப்பினர்கள் தங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் UAN எண்ணுடன் ஆதார் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை முறைப்படி இணைத்து இருக்க வேண்டும்.
இதற்கு ஜூன் 30-ம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் பிஎஃப் பணத்தை 3 நாட்களில் ATM அல்லது UPI மூலம் எடுக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். உங்களின் UAN, ஆதார், PAN மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே உங்களால் ATM அல்லது UPI மூலம் பணத்தை எடுக்க முடியும்.
உங்கள் PF பணத்தை எடுக்க முயற்சி செய்கிறீர்களா, ஆனால் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகும் அது கிடைக்கவில்லையா? PF பணத்தை விரைவாக எடுக்க நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
விதி 1 - உங்களுடைய PF கணக்கில் உள்ள பணத்தை 3 நாளில் எடுப்பதற்கு முதலில் உங்களுடைய UANஐ UMANG ஆப்பில் பேஸ் ஆன்டிபிகேஷன்(Face Authentication ) மூலமாக ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். உங்கள் UAN-ல் ஆதார் மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும். இல்லையெனில், பணம் எடுக்க முடியாது.
விதி 2 - EPFவில் இ-நாமினேஷன்(E-Nomination) நிறைவு செய்திருக்க வேண்டும்.
விதி 3 - உங்களுடைய வங்கிக் கணக்கில் KYC (ஆதார், பான், வங்கி விவரங்கள்) சரிபார்க்கப்பட்டு, கணக்கு ஆக்டிவ் நிலையில் இருக்க வேண்டும்.
விதி 4 - உங்களுடைய PF பணம் ரூ.50,000க்கு மேல் இருந்தால் உங்களுடைய பேன் கார்டை சேர்த்து சரிபார்க்க வேண்டும்.
விதி 5 - உங்கள் நிறுவனத்தில் (Employer) நீங்கள் பணியில் சேர்ந்த தேதி மற்றும் விலகிய தேதி (Date of Exit) சரியாகப் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும். இது 'Full Settlement' செய்யும்போது மிக அவசியம்.
இந்த நடைமுறைகளை நீங்கள் சரியாக செய்திருந்தால் தான் உங்களுடைய PF பணம் நினைத்த நேரத்தில் மூன்று நாட்களில் எடுக்க முடியும். இந்த அனைத்து படிகளையும் நீங்கள் பூர்த்தி செய்தும் உங்கள் PF தொகையை இன்னும் பெறவில்லை என்றால், அதாவது, UPI/ATM வசதி இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராததால், EPFO போர்ட்டலில் (EPFO Member Portal)ஆன்லைனில் படிவம் 19 (முழு settlement) அல்லது படிவம் 31 (பாதி பணம்) மூலம் விண்ணப்பிப்பதே பாதுகாப்பான வழியாகும்.
UPI/உடனடி பணம் எடுப்பு அம்சம் ஏப்ரல் 2026 க்குள் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. UPI மூலம் 3 நாட்களில் உங்கள் பிஎப் பணத்தை எடுக்கமுடியவில்லை என்றால், அந்த செயல்முறை உங்கள் கணக்கிற்கு இன்னும் செயல்படுத்தாமல் இருக்கலாம்.
அதேபோல் உங்கள் கணக்கு "Inoperative" (செயலற்றது) ஆக இருந்தால், முதலில் அதை 'Unblock' செய்ய கோரிக்கை விடுக்க வேண்டும்.
2026-ம் ஆண்டின் தொடக்க கால EPFO அறிவிப்புகளின் அடிப்படையில் இது வழங்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரையிலான தொகையை 3 நாட்களுக்குள் தானாகவே தீர்வு செய்யும் (3-day, 5-lakh auto-settlement) நடைமுறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த மாற்றத்தின் போது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் 3 நாட்களுக்கு மேல் தாமதமானால், EPFO-ன் 24x7 ஹெல்ப்லைன் எண்: 1800 118 005 மூலம் நிலையை சரிபார்க்கலாம்.