

புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் கடந்த 9-ம்தேதி தேர்தல் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளுக்கு வரும் 23-ம்தேதியும் ஓரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்தில் வரும் 23-ம்தேதி மற்றும் 29-ம்தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 4-ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
மேலும் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளுடன் நான்குமுனைப்போட்டி நிலவ உள்ளது. அதிமுக மற்றும் திமுக பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட, வழக்கம் போல் சீமான் தனித்து களம் காண்கிறார். மேலும், தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து வரும் தவெக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் எந்த கட்சிகளும் இணையாததால் தனித்து போட்டியிட உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய வரவான தவெக முழு வீச்சில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.
வட மாவட்டங்களை தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் கடும் வெயிலையும் பெருட்படுத்தாமல் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நெல்லை, தூத்துக்குடியில் விஜய் பிரசாரத்தில் போது வழியெங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் பிரசாரம் செல்ல முடியாத இடங்களில் அவரது உருவ பொம்மை, படத்தை வைத்து தொண்டர்கள் பிரசாரத்தை ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீண்டகாலமாக அதிமுகவின் அடையாளமாகத் திகழும் நடிகர் ராமராஜன் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக இந்த தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது கடந்த காலங்களில் அதிமுகவுக்காக பிரசாரம் மேற்கொண்டிருந்த ராமராஜன் தற்போது விஜய்க்கான தென் மாவட்டங்களில் சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
தீவிர எம்ஜிஆர் ஆதரவாளரான ராமராஜன், தொடர்ந்து ஜெயலலிதா ஆதரவாளராக மாறினார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். அதன்பின்னர் அதிமுகவின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். தற்போது வரை அதிமுக உறுப்பினராக இருக்கும் இவரை அண்மை காலமாக அதிமுக தலைமை கண்டுகொள்வதே இல்லை.
அதன்படி ஆலங்குளம் தொகுதியில் ராமராஜன் பிரசாரம் செய்ய உள்ளார் என்றும் தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் விபினுக்கு ஆதரவாக ராமராஜன் பிரசாரம் செய்ய உள்ளார். ராமராஜன் ஆலங்குளம் தொகுதியில் பிரசாரம் செய்வதற்கு பின்னால் ஒரு முக்கிய காரணம் மறைந்துள்ளது. விபினின் அப்பா வைகுண்டராஜா, ராமராஜனின் தீவிர ரசிகராம்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்தாண்டு ராமராஜன் நடித்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது அந்த படத்தை தனது தியேட்டர்களில் திரையிட்டு நீண்ட நாட்கள் ஓட்டி வைகுண்டராஜா ஆதரவு அளித்தாராம்.
அந்த நன்றிக்கடனுக்காக தான் இப்போது ராமராஜன் தவெகவுக்கு ஆதரவாகத் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களிலும் ராமராஜனுக்கு இன்னமும் செல்வாக்கு உள்ளது என்பதால் இவர் தவெகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
குறிப்பாக, எம்ஜிஆரின் விசுவாசிகள் ராமராஜனை இன்றும் ஒரு பிரதிநிதியாகவே பார்க்கிறார்கள் என்பதால் இது அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் கணித்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள்.