நடிகை சமந்தா ரூத் பிரபுவிற்கு அறிமுகம் எதுவும் தேவையில்லை. மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதே நேரம் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். முதலில் பாய்ஸ் திரைப்பட நடிகர் சித்தார்த்தை மணக்க இருந்த அவர், பின்னாளில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களின் திருமணம் இத்தாலியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தெலுங்கு திரையுலகின் புகழ்பெற்ற ஜோடியாக இவர்கள் பார்க்கப்பட்டனர்.
பின்னர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு மையாட்டிஸ் என்னும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த நோய்வாய்ப்பட்ட தருணத்தில் கிறிஸ்தவரான சமந்தா பல கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தார். அது போலவே அடிக்கடி ஈஷா யோகா மையத்திற்கும் சென்று ஆன்மீக ஈடுபாட்டை அதிகப்படுத்திக் கொண்டார். இந்த தருணத்தில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, திரைப்பட நடிகை சோபிதா துலிபலாவை விமரிசையாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சமந்தா ரூத் பிரபு, இன்று அதிகாலையில் ஈஷா யோகா மையத்திற்குள் உள்ள லிங்க பைரவி கோயிலில் இயக்குனர் ராஜ் நிதிமோருவை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ள ராஜ் நிதிமோரு, கே.டி. கிருஷ்ணாவுடன் இணைந்து 'ராஜ் & டிகே' என்று இணைந்து இயக்குனராகப் பணிபுரிகிறார். இவர்கள் 'பேமிலி மேன்' வெப் சீரிஸ் மூலம் பாலிவுட்டில் புகழ் பெற்றனர். பின்னர் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த , 'ஃபர்ஸி'தொடரும் இவர்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
பேமிலி மேன் தொடரின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா நடித்திருந்தார் , கடுமையான மையாட்டிஸ் நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா , தனது ஆரோக்கியத்தை மீட்டெடுக்க யோகா, தியானம், மற்றும் மனநலனில் கவனம் செலுத்தினார். இந்த காலகட்டத்தில்தான் ஈஷா யோகா மையத்திற்கு அடிக்கடி சென்று வந்தார். சமந்தாவின் உடல்நலக் குறைவு காலத்தில் , ராஜ் நிடிமோரு மிகவும் உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தொழில் ரீதியாக ஆரம்பித்த இந்த நட்பு, நாளடைவில் நெருக்கமான உறவாக மலர்ந்துள்ளது.
தற்போது சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகவுள்ள 'மா இண்டி பங்காரம்' என்ற தெலுங்கு படத்தையும் ராஜ் மற்றும் டிகேவுடன் இணைந்து தயாரிக்க உள்ளனர். சமீபத்திய காலத்தில் சமந்தாவுடன் ராஜ் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் தென்பட்டுள்ளார். இவருவரும் காதலிப்பதாக மீடியாக்கள் மூலம் தகவல் பரவியது. இந்நிலையில் இவர்களின் திருமணம் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு சமந்தாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளார்கள்.
சமந்தா - ராஜ் இருவரும் தங்கள் திருமணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், ஈஷாவில் நடந்ததாகக் கூறப்படும் இந்த ரகசியத் திருமணம், தென்னிந்தியத் திரையுலகில் பேசு பொருளாகியுள்ளது.