விமர்சனம்: ரேகை - க்ரைம் நாவல்களின் மன்னன் இப்போ OTT-யில் - மிரட்டும் சஸ்பென்ஸ்!

Regai Web Series Review
Regai Web Series
Published on
ரேட்டிங்(3.5 / 5)

முன்னணி தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் ராஜேஷ் குமார் முக்கியமானவர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கிரைம் எழுத்தில் மன்னனாக விளங்குகிறார் ராஜேஷ் குமார். 2000 ற்கும் மேற்பட்ட சிறுகதைகள், 1500 ற்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியவர். இவரின் கதை இடம் பெறாத முன்னணி பத்திரிகைகளே தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லி விடலாம். தமிழ் நாவல்கள் எளிமைப்படுத்தப்பட்ட 'பாக்கெட் நாவல்களாக' வடிவம் பெற்ற 1980 க்கு பிறகு ராஜேஷ் குமார் எழுத்துக்கள் இன்னும் அதிக அளவில் மக்களை சென்றடைந்தது.

இன்று த்ரில்லர் படங்களுக்கும், தொடர்களுக்கும் பெரிய வரவேற்பு இருக்கிறது. இதை புரிந்து கொண்ட இளம் இயக்குனர்கள் சிலர் ராஜேஷ் குமாரின் நாவல்களை படமாக்க முயற்சி செய்து வருகிறார்கள். இந்த வரிசையில் டைரக்டர் தினகரன் என்பவர் ராஜேஷ் குமார் நாவல் ஒன்றை மையமாக கொண்டு 'ரேகை' என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார். இந்த தொடர் ஜீ 5 ஒரிஜினல் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிசெய்து வருகிறார் பாலா ஹாசன். அங்கே friends of போலீஸ் அமைப்பில் இருக்கும் ஒரு இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்ய படுகிறார். பாலா ஹாசன் இந்த கொலையை விசாரணை செய்யும் போது கொலை செய்யப்பட்ட நபரின் நண்பர்களும் ஓரிரு நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது. கொலை செய்ய பட்ட நான்கு பேரின் கைரேகைகளும் ஒரே போன்று இருக்கிறது. இது எப்படி சாத்தியம்? என்று குழம்புகிறது காவல் துறை. ஒரு நாள் இரவு ரோந்து பணியின் போது ஒரு நபரை சந்தேகப்பட்டு விரட்டுகிறார் பாலா ஹாசன். அந்த நபர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். அவரின் பொருட்களை பார்க்கும் போது வெட்டப்பட்ட கை ஒன்று கிடைக்கிறது, இந்த கைக்கும் கொலை செய்யப்பட்ட நான்கு பேருக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று உதவி ஆய்வாளரின் போலீஸ் மூளை சொல்கிறது. இப்படி பரபரப்பாக நகர்கிறது தொடர்.

மொத்தம் ஆறு எபிசோடுகளை கொண்ட இந்த தொடரை பார்க்க உட்கார்ந்தால் முடியும் வரை எழுந்து செல்ல மனம் வராது. அந்த அளவிற்கு காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார் டைரக்டர். மொத்தம் ஆறு எபிசோடுகளை கொண்ட ரேகை தொடரில் ஒவ்வொரு எபிசோட் முடியும் போது ஒரு ட்விஸ்ட் அல்ல பல ட்விஸ்ட்கள் இருக்கிறது.

கொலைகளுக்கு பின் சிறிது அறிவியலும் இருக்கிறது. விடுதலை, ஜெய் பீம் படங்களில் சிறிய வேடங்களில் நடித்த பாலா ஹாசன் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார். வெற்றி என்ற போலீஸ் அதிகாரியாக சரியாக பொருந்தி போகிறார். சிறிது மிடுக்கு, கோபம், கொஞ்சம் காதல் என இவரது நடிப்பு நன்றாக உள்ளது.

போலீஸ் கான்ஸ்டபிள் பவித்ரா ஜனனியும் சற்று நடிப்புடன் நகைச்சுவையும் செய்கிறார். இதுவரை சினிமாவில் அன்பான அக்கா, அண்ணி வேடங்களில் வந்த வினோதினி இந்த தொடரில் ஒரு மாறுபட்ட நாம் யோசிக்காத கதாபாத்திரத்தில் வந்துள்ளார். இவரது கேரக்டர் சஸ்பென்ஸ்...

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: BP 180 - மாறுபட்ட திரைமொழி!
Regai Web Series Review

ஆர்.எஸ். ராஜ் பிரதாப்பின் பின்னணி இசை ஒரு த்ரில்லருக்கான பயத்தை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது. மகேந்திர எம் ஹென்றி ஒளிப்பதிவு லான் லீனியரில் சொல்லபட்ட கதைக்கு கொடுத்ததால் பலம் சேர்க்கிறது. உலகத்தில் ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டை குழந்தைகளின் கை ரேகை கூட ஒன்றாக இருக்காது என்று சொல்வார்கள். இந்த ரேகை தொடர் நான்கு பேருக்கும் ஒரே போன்று இருக்காது என்ற இலக்கணத்தை மாற்றி நான்கு பேருக்கும் ஒரே கைரேகை என்ற கோணத்தில் பரபரப்பான கதை சொல்லி உள்ளது இந்த ரேகை.

இதையும் படியுங்கள்:
இன்று வெளியாகும் 10 திரைப்படங்கள்...எதிர்பார்ப்பில் தனுஷின் ‘தேரே இஷ்க் மே’..!
Regai Web Series Review

தொடரில் ஒரே ஒரு குறையும் இருக்கிறது, ஹீரோ ஹீரோயினின் காதல் தொடருக்கு சற்று ஸ்பீட் பிரேக்கர் போல் உள்ளது. ராஜேஷ் குமாரின் நாவலை படிக்கும் போது எந்த வித அனுபவம் கிடைக்குமோ அதே போன்ற அனுபவம் இந்த ரேகையில் கிடைக்கிறது. ரேகை - வார இறுதியில் வந்துள்ள சரியான சூப்பரான த்ரில்லர் என்டர்டெயினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com