

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ச்சியாக 11 தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளும், எம்எல்ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளனர்.
இதன் காரணமாக அதிமுக-விற்கு மாற்று தலைமையை தேர்ந்தெடுக்க நேரம் வந்து விட்டதாக சி.வி.சண்முகம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம் வீட்டிற்கு சென்று வந்தனர்.
மேலும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், புதியதொரு தலைமையை அதிமுக நிர்வாகிகள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
சி.வி.சண்முகம் தலைமையில் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை ஆதரிப்பதாக பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் தெரிவித்துள்ளனர்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது திமுகவில் இணைந்து எம்எல்ஏ-வாக இருக்கிறார். அதே நேரம் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தற்போது பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.
அதிமுகவில் பல ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட இரு பெரும் தலைவர்கள், மாற்றுக் கட்சியில் இணைந்தது அக்கட்சிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இபிஎஸ் தலைமையிலான அதிமுகவும் வெற்றியைப் பெறத் தவறியதால் மீண்டும் இரண்டாக உடையும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது.
சட்டமன்ற குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை தேர்ந்தெடுக்க சி.வி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். இருப்பினும் இபிஎஸ்-ன் இந்த முயற்சி கைகூடவில்லை எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிவி.சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் எஸ்பி.வேலுமணி தலைமையில் ஏற்கனவே ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது அதிமுக தலைமையை கைப்பற்றும் நிலைப்பாட்டில் இவர்கள் மூவரும் செயல்பட்டு வருகின்றனர்.
இப்போதைய சூழலில் இபிஎஸ்க்கு ஆதரவாக இருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது இதன் காரணமாக அதிமுகவின் தலைமையில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
மேலும் சி.வி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏ-க்கள், தவெக-விற்கு ஆதரவளிக்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது நடந்தால் சட்டமன்றத்தில் தவெக-வின் பலம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ள அதிமுக கட்சியில், மீண்டும் ஒரு விரிசல் ஏற்பட போவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.