

நிலவுக்கு செயற்கைகோள்களை அனுப்பி ஆராய்ச்சி செய்வது மிகப் பெரும் சாதனையாக பார்க்கப்படும் வேளையில், மனிதர்களை அனுப்புவது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரை நூற்றாண்டுக்குப் பிறகு நாளை மனிதர்களை நிலவுக்கு அனுப்பவுள்ளது நாசா. இதற்காக ஆர்டெமிஸ் என்ற திட்டத்தை தொடங்கி, செயல்படுத்தி வருகிறது நாசா.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருந்த விண்வெளி ஆர்வலர்களுக்கு, இது மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. 1972 ஆம் ஆண்டில் ‘அப்பல்லோ-17’ விண்கலத்திற்குப் பிறகு நிலவுக்கு மனிதர்கள் யாரும் செல்லவில்லை.
அப்போது நிலவுக்கு செல்வது மிகப்பெரும் சாதனையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, நிலவில் மனிதர்கள் வசிக்க ‘நிரந்தர மனித தளம்’ அமைப்பதையும், அங்கிருந்து செவ்வாய் கிரகத்திற்கு செல்வதற்கான ஒத்திகையாகவும் ஆர்டெமிஸ் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆர்டெமிஸ் II:
53 ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களை நிலவுக்கு அருகில் அழைத்துச் செல்லும் முதல் மிஷன் ஆர்டெமிஸ் II. இந்தத் திட்டத்தின் படி விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்க மாட்டார்கள்; மாறாக நிலவைச் சுற்றி வருவார்கள்.
ஆர்டெமிஸ் III:
மனிதர்கள் மீண்டும் நிலவின் மேற்பரப்பில் தடம் பதிக்கப் போவது ஆர்டெமிஸ் III மிஷனில் தான். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால், நிலவில் கால் பதிக்கும் முதல் பெண்ணும், முதல் கறுப்பினத்தவரும் இந்தத் திட்டத்தின் மூலம் வரலாறு படைக்க உள்ளனர்.
இதுவரை யாரும் சென்றிராத நிலவின் தென்துருவப் பகுதியில் (South Pole) தரையிறங்குவதே நாசாவின் முக்கிய நோக்கம். அங்கு தான் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.
ஆர்டெமிஸ் திட்டத்திற்காக உலகின் வலிமையான ராக்கெட்டான Space Launch System மற்றும் மனிதர்கள் பயணிக்கும் Orion விண்கலத்தை நாசா பயன்படுத்துகிறது.
"நாங்கள் மீண்டும் நிலவுக்குச் செல்கிறோம்; ஆனால் இம்முறை அங்கேயே தங்குவதற்காகச் செல்கிறோம்” இதுதான் நாசாவின் தற்போதைய தாரக மந்திரமாக உள்ளது.
இந்நிலையில் நிலவுக்கு மனிதர்கள் செல்வதற்கான கவுண்டவுனை இன்று காலை தொடங்கியது நாசா. நாளை (ஏப்ரல் 1) மாலை 4 விண்வெளி வீரர்களுடன் நிலவுக்குப் பயணிக்க தயாராக இருக்கிறது ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் ராக்கெட்.
கிட்டத்தட்ட இந்த நிலவு பயணம் 10 நாட்களுக்கு நீடிக்கும் என நாசா தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து புறப்பட்டு, நிலவைச் சுற்றி வந்து மீண்டும் பசிபிக் கடலில் தரை இறங்குவது தான் இத்திட்டத்தின் நோக்கம்.
நிலவுக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்கள்:
1. ரீட் வைஸ்மேன் (Reid Wiseman) - கமாண்டர்:
அமெரிக்காவைச் சேர்ந்த இவர், ஆர்டெமிஸ் திட்டத்தின் தலைவராகச் செயல்பட உள்ளார்.
2. விக்டர் குளோவர் (Victor Glover) - பைலட்:
அமெரிக்காவை சேர்ந்த இவர், நிலவுக்கு செல்லும் முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமையை பெற உள்ளார்.
3. கிறிஸ்டினா கோச் (Christina Koch) - மிஷன் ஸ்பெஷலிஸ்ட்:
அமெரிக்காவை சேர்ந்த நிலவுக்கு செல்லும் முதல் பெண்மணி இவர்தான். விண்வெளியில் ‘அதிக நாட்கள் தங்கியிருந்த பெண்’ என்ற சாதனையும் இவருக்கு உண்டு.
4. ஜெரமி ஹான்சென் (Jeremy Hansen) - மிஷன் ஸ்பெஷலிஸ்ட்:
கனடாவை சேர்ந்த இவர், நிலவுக்கு செல்லும் முதல் அமெரிக்கர் அல்லாத விண்வெளி வீரர் என்ற சிறப்பை பெற உள்ளார்