

2027-ல் தீவிரமான எல் நினோ (El Niño) நிலை படிப்படியாகக் குறைந்து, ஆண்டும் பிற்பகுதியில் லா நினா (La Niña) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (INCOIS) மற்றும் உலக வானிலை அமைப்பு (WMO) கணித்துள்ளன. அப்படி என்ன இந்த லா நினோ? இந்த மாற்றத்தால் இந்தியாவில் 2027-ல் ஏற்படக்கூடிய முக்கியத் தாக்கங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் நிகழ்வை எல் நினோ (El Niño) என்கிறோம்.
இந்த நிகழ்வு கடந்த மே மாதம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய நிலையில், இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து, சூப்பர் எல் நினோவாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்வு உலகின் பல்வேறு நாடுகளில் மழைப்பொழிவு மற்றும் வெப்பநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த 'சூப்பர் எல் நினோ' தாக்கத்தால் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் கனமழையும் வெள்ளப்பெருக்கும் ஏற்படக்கூடும் என்றும், ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியாவின் வடபகுதிகளில் வறட்சி மற்றும் வெப்ப அலை வீசும் அபாயம் உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
2027 வரை வலுவான எல் நினோ தொடர வாய்ப்புள்ளதால் குளிர்காலம் குறைந்து, அடுத்தாண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலேயே கடும் வெப்பம் மற்றும் கோடை வானிலை முன்கூட்டியே தொடங்கலாம்.
அதன்பிறகு, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ENSO Neutral எனப்படும் நடுநிலைக் காலநிலை நிலவ வாய்ப்புள்ளதாகவும், அதனை தொடர்ந்து ஜூன் மாதம் முதல் ஆண்டின் பிற்பகுதி வரை லா நினோ (La Niña) உருவாகி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எல் நினோவுக்கு நேர்மாறாக, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிடக் குறையும் நிகழ்வையே லா நினோ (La Niña) என்கிறோம். இந்த மாற்றங்கள் இந்தியாவிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, எல் நினோ காலத்தில் இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்யும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படும் அதேநேரத்தில், லா நினோ காலத்தில் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட அதிகமாகப் பெய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியப் பெருங்கடலில் நிலவும் வெப்ப அலைகள் உள்ளிட்ட பிற காரணிகளும் மழையைத் தீர்மானிக்கும்.
ஆண்டின் தொடக்கத்தில் எல் நினோ காரணமாக நீர் பற்றாக்குறை மற்றும் ரபி பயிர்களில் (குறிப்பாக கோதுமை போன்றவற்றில்) வெப்ப அழுத்தம் (heat stress) ஏற்படலாம்.
அதேசமயம் பருவமழை காலத்தில் லா நினா வலுப்பெற்றால் விவசாயம் மற்றும் நீர்நிலைகளுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
அதேசமயம், லா நினோ காலத்தில் இந்தியாவில் அதிக மழைப்பொழிவிற்கான சாதகமான சூழலை உருவாக்கினாலும், அது நாடு முழுவதும் ஒரே சீரான அதிக மழைப்பொழிவு ஏற்படும் என்றும் உறுதியாகக் கூற முடியாது.
இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole - IOD) மற்றும் மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation - MJO) ஆகியவை பருவமழையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. லா நினா சாதகமாக இருந்தாலும், IOD எதிர்மறையாக (Negative IOD) இருந்தால் மழைப்பொழிவு குறைய வாய்ப்புள்ளது.
லா நினா பொதுவாகத் தென்மேற்குப் பருவமழையை (ஜூன் - செப்டம்பர்) வலுப்படுத்தும். ஆனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு முக்கிய மழையைத் தரும் வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் - டிசம்பர்) காலத்தில், லா நினா சில சமயங்களில் சராசரிக்கும் குறைவான மழையைக் கொடுக்கக்கூடும்.
இந்தியா பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருப்பதால், லா நினா காலத்தில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அதிக மழை பெய்தாலும், வடகிழக்கு மாநிலங்கள் அல்லது தென் தீபகற்பத்தின் சில பகுதிகளில் மழைப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது.
சுருக்கமாகக் கூறினால், லா நினா என்பது பருவமழையைத் தீர்மானிக்கும் பல காரணிகளில் ஒன்று மட்டுமே; அது மட்டுமே முழுமையான மழைப்பொழிவை உறுதி செய்யாது.
அடுத்தாண்டு பிற்பகுதியல் லா நினோ உருவாகவும் வாய்ப்புள்ளதாக இந்திய விஞ்ஞானிகள் கணித்துள்ள நிலையில், இந்தியாவின் பருவமழை மற்றும் கடல் சார்ந்த சூழல்களில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.