

டெல்லியில் அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலையை எதிர்கொள்ள, டெல்லி அரசு 'சில் பிளான்' (CHILL PLAN - Heat Action Plan 2026) என்ற புதிய செயல் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) காரணமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தலைமைச் செயலகத்தில், 2026ம் ஆண்டின் வெப்ப அலை செயல் திட்டத்தின் கீழ் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி வெப்பத்தை மக்கள் எதிர்கொள்ள பல்வேறு ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதில் ஒன்று தான் சில் பிளான் (chill plan) . இதன்படி பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் 'வாட்டர் பெல்' (WATER BELL SYSTEM ) முறை, பேருந்து நிறுத்தங்களில் தண்ணீரை சாரல் போல் தெளிக்கும் மிஸ்டிங் முறை (MISTING )முறை உள்ளிட்டவை அடங்கியதுதான் CHILL PLAN அறிவிப்பு.
மாணவர்கள் பள்ளிகளில் தண்ணீர் குடிக்க மறந்து போவதால் பலவித உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதைத் தவிர்த்து அவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய 'வாட்டர் பெல்' எனும் முறை அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் பள்ளி மாணவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பு அவர்களுக்கு ORS கரைசல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது இடங்களில் குறிப்பாக மக்கள் அதிகம் வந்து செல்லும் பேருந்து நிறுத்தங்களில் தண்ணீர் குளிரூட்டிகள் (வாட்டர் கூலர்ஸ்) மற்றும் 11,000-க்கும் மேற்பட்ட குளிர்விப்புப் புள்ளிகள் (கூலிங் பாயிண்ட்) அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் வெப்பம் தொடர்பான பாதிப்புகளுக்குப் போதுமான படுக்கை வசதிகளை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும் என்றும், வெப்ப அவசரநிலைகளைக் கையாள ஆம்புலன்ஸ்களில் அத்தியாவசிய வசதிகள் பொருத்தப்பட வேண்டும் என்றும் மேலும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக நகரம் தழுவிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைவு மீட்புக் குழுக்களைப் பணியில் அமர்த்துதல், பொது இடங்களில் வாய்வழி நீரேற்ற உப்புகள் (ORS) மற்றும் குளிர்ந்த குடிநீர் கிடைப்பதை அதிகரித்தல், பேருந்து நிறுத்தங்களில் நீர்தெளிப்பு அமைப்புகளை நிறுவுதல் மற்றும் குளிர் கூரைத் தீர்வுகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள் நலன் கருதி மதியம் 12 முதல் 3 மணி வரை கடும் வெயிலில் வெளிப்புறப் பணிகளுக்குத் தடை அல்லது நேர மாற்றம் மற்றும் தொழிலாளர்களுக்குத் தண்ணீர், தொப்பிகள், துண்டுகள் மற்றும் முதலுதவிப் பெட்டிகள், ஐஸ் கட்டிகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
. "கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளாக, டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களாகத் தொடர்ச்சியாக 40°C-க்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு, கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, அதிக அபாயம் உள்ள பகுதிகளைக் கண்டறிய செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி அரசு நகரில் ஒரு விரிவான மதிப்பீட்டை நடத்தியது" என்றும் டெல்லி முதலமைச்சர் கூறியுள்ளதுடன் முன்னெடுத்த வெப்பத் தடுப்பு நடவடிக்கைகள் மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.