அஞ்சல் துறை வேலைவாய்ப்புகளில் குறைவான கிரேடு கொண்ட காலிப் பணியிடங்களுக்கு பெரும்பாலும் எழுத்துத் தேர்வு நடைபெறாது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தான் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில் தற்போது இளைஞர்கள் அஞ்சல் துறையில் பணியாற்ற சிறப்பான வாய்ப்பு ஒன்றை அளித்துள்ளது அஞ்சல் துறை. இதன்படி ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்ய நேரடி முகவர்களை பணியமர்த்த தாம்பரம் கோட்ட அஞ்சல் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அஞ்சல் துறை ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்ய அவ்வப்போது முகவர்களைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அவ்வகையில் தற்போது தாம்பரம் கோட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாம்பரம் கோட்டம் முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுள் காப்பீட்டை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நேரடி முகவர்களை நியமிக்க வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. HVF சாலையில் இருக்கும் ஆவடி பாசறை தலைமை தபால் நிலையத்தில் காலை 11 மணிக்கு நேர்முகத் தேர்வு தொடங்க உள்ளது. விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை.
இளைஞர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வு பெற்றவர்கள், மூத்த குடிமக்கள், ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்ட பலரும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இது முற்றிலும் கமிஷன் சார்ந்த பணியாகும். விண்ணப்பதாரர் வேறு எந்த காப்பீட்டு நிறுவனத்திலும் பணிபுரியக் கூடாது. முகவராக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர் இந்திய குடியரசுத் தலைவரின் பெயரில் தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் கிசான் விகாஸ் பத்திரத்தின் வடிவில் ரூ.5000 வைப்புத் தொகை செலுத்த வேண்டும். மேலும் ரூ.100-ஐ தற்காலிக உரிமக் கட்டணமாக செலுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: செப்டம்பர் 10 - புதன்கிழமை.