
இந்தியாவில் அஞ்சல் துறை பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. தபால், முதலீடு மற்றும் சேமிப்பு உள்ளிட்ட முக்கிய நோக்கங்களுக்காக அஞ்சல் அலுகலகங்கள் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றன. ஆதார் கார்டு திருத்தங்கள் மற்றும் வங்கிக் கணக்கில் பணம் எடுத்தல் உள்ளிட்ட சேவைகளையும் அஞ்சல் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது புதிதாக பாஸ்போர்ட் சேவையையும் அஞ்சல் துறையின் மூலம் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அஞ்சல் துறை தொடர்ந்து பல்வுறு புதிய அம்சங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் அஞ்சல் துறையின் மூலம் பாஸ்போர்ட் சேவைகள் வழங்கப்படுவது, பொதுமக்கள் பலருக்கும் உபயோகமானதாக இருக்கும்.
இதன் முதல்கட்டமாக தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் சேவைகள் தேவைப்படுமாயின், பொதுமக்கள் வேறெங்கும் அலையாமல் நேரடியாக அஞ்சல் அலுவலகத்திற்கு வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதுநிலை அஞ்சல் தூத்துக்குடி கோட்ட கண்காணிப்பாளர் வதக் ரவிராஜ் ஹரிஷ்சந்திரா கூறுகையில், “தூத்துக்குடி கோட்டம் திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள அஞ்சல் ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுகிறது. பொதுவாக இங்குள்ள மக்களுக்கு மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். இனி சான்றிதழ் சரிபார்ப்பு தூத்துக்குடி அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திலேயே செய்யப்படும்.
புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிப்பு மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை ஆன்லைனில் ரூ.1,500 சேவைக் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த பிறகு, ஒரு குறிப்பிட்ட தேதியில் சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல வேண்டும். ஆன்லைனில் குறிப்பிடப்பட்ட தேதியில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகி தங்களுக்கான சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடியில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவையைப் பயன்படுத்திக் கொண்டார். பிறகு தூத்துக்குடி மக்கள் அஞ்சலக பாஸ்போர்ட் சேவையை உள்ளூரிலேயே பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.
அஞ்சல் துறையின் பாஸ்போர்ட் சேவை விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வசதி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைவதோடு, நேரத்தையும் மிச்சப்படுத்தும்.