

தமிழகத்தில் 2030ம் ஆண்டிற்குள் குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உன்னத இலக்கை அடைய, தமிழக அரசு 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தை அறிவித்து மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. தகுதியான ஏழை எளிய மக்கள் 360 சதுர அடி பரப்பளவில், தலா ரூ.3.50 லட்சம் நிதியுதவியுடன் சொந்த வீடு கட்ட இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதற்காக 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் முதற்கட்டமாக 2025-26 நிதியாண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிக்கான அரசாணையை வெளியிடப்பட்டு புதிய வீடுகள் கட்டும் பணி தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு லட்சம் வீடுகள் கட்டும் பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் விரைவாக நடைபெற்று வரும் சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் வீடுகள் ஊரகப் பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
தமிழக அரசால் 2024-25 நிதியாண்டில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், 2030-க்குள் 8 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளது. அதாவது, இப்போது கட்டுமான பணியில் இருக்கும் வீடுகளைத் தவிர்த்து, மேலும் 5 லட்சம் வீடுகள் அடுத்த நான்காண்டுகளுக்குள் கட்டி முடிக்க அரசு முடிவெடுத்துள்ளது. குறிப்பாக 2025-26 நிதியாண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் புதிதாக வீடுகள் கட்ட திட்டமிட்டால், கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கு விண்ணப்பிக்க இது சரியான நேரமாகும். அதாவது, இதற்கு முன்பு கலைஞரின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் புதிதாக வீடு கட்ட விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக கிடைக்க அதிக சாத்திய கூறுகள் உள்ளன.
ஏனெனில் விரைவில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்து தேர்தல் நடக்க இருப்பதால், பொதுமக்கள் முடிந்தளவுக்கு விரைவாக உங்கள் பகுதி உள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பது குறித்து கேட்டறிந்து, வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.
இந்த வாய்ப்பை தவறவிட்டால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்து ஜூன், ஜூலை மாதம் வரை காத்திருக்க வேண்டும். அப்போது கூட இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயமாக புதிய வீடுகள் கட்டுவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சரியாக திட்டமிட்டால் மட்டுமே உங்கள் சொந்த வீடு கனவு நனவாகும் என்பதை மட்டும் மறக்க வேண்டும். அரசின் இத்திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதி கிடையாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
யாருக்கு வீடு கிடைக்காது?
சொந்தமாக கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள், குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட்டு போட்டிருப்பவர்கள், புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதியற்றவர்கள்.
தங்களுக்கு சொந்தமான நிலத்தை வாடகை அல்லது குத்தகைக்கு விட்டிருப்பவர்கள், மத்திய, மாநில அரசுகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், இத்திட்டத்திற்குத விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வருமான வரி செலுத்துபவர்கள் அல்லது ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவர்களும் விண்ணப்பிக்க தகுதியில்லை.
ஏற்கனவே மத்திய அல்லது மாநில அரசின் வீட்டு வசதித் திட்டங்களில் அதாவது PMAY, ஊரக வீட்டு வசதித் திட்டங்களின் மூலம் வீடு கட்ட நிதியுதவி பெற்றவர்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
* தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்ப முடியும்.
* SC/ST, விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* குடிசை வீடுகளில் வசிப்பர்கள் மட்டுமே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கிடக் கோரி விண்ணப்பிக்க முடியும்.
* சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் வீடு கட்ட தகுதியானவர்கள்.
* இந்த திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
* ஒவ்வொரு வீட்டிற்கும் அலகுத் தொகை ரூ.3,50.000/- (ரூபாய் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) கொடுக்கப்படும்.
- இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டி அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
- சொந்த வீடு என்பது பெரும்பாலானோரின் கனவு. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கே சொந்த வீட்டின் அருமை தெரியும். உங்களிடம் சொந்த நிலமும், வீடு கட்டுவதற்காக கையில் சேமித்து வைத்த பணமும் இருந்தால், அரசு உங்களுக்கு இத்திட்டத்தின் வழியே 3.5 லட்சம் ரூபாய் வரை மானியம் கொடுத்து கனவு இல்லத்தை நனவாக்கிக்கொடுக்கும். எனவே தமிழ்நாடு அரசு கொடுக்கும் இந்த திட்டத்தை பயன்படுத்தி உங்களின் கனவு இல்லத்தை நனவாக்கிக் கொள்ளுங்கள்.