

இளைஞர்கள் சுய தொழில் தொடங்கவும், பட்டப்படிப்பு முடித்தவுடன் தொழில் அனுபவம் பெறவும் தமிழக அரசு சார்பில் அவ்வப்போது பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இம்மாத இறுதியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் நகை மதிப்பீட்டாளர் உள்ளிட்ட 2 பயிற்சிகள் சென்னையில் நடக்கவுள்ளது.
மாணவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் என அனைவரும் இந்தப் பயிற்சியை பெற முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகின்ற அக்டோபர் 27 முதல் 31-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நகை மதிப்பீட்டாளர் பயிற்சியும், அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சியும் நடைபெற உள்ளது.
நகை மதிப்பீட்டாளர் பயிற்சி:
அக்டோபர் 27 முதல் 31-ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கம் மற்றும் வெள்ளி குறித்த நகை மதிப்பீட்டாளர் பயிற்சிகள் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் தரம், எடை, தூய்மைக்கான ஆசிட் சோதனை, காரட் மதிப்பீடு, விற்பனை விலையை நிர்ணயித்தல், ஹால்மார்க் மற்றும் போலியான நகைகளை கண்டறியும் முறை உள்ளிட்டவை குறித்து செய்முறைப் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்பதால், இதனைக் கொண்டு வேலைவாய்ப்பு பெறுவதும் எளிதாக இருக்கும். அதோடு பொதுத்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் வேலைக்கான வாய்ப்புகள் குறித்தும் விளக்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், குறைந்தபட்சம் 18 வயது நிரம்பிய ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் என அனைவரும் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு பயிற்சி:
அக்டோபர் 28 முதல் 30-ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி செயற்கை நுண்ணறிவின் அடிப்படை தத்துவம், பயன்படுத்தும் முறை மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் திறம்பட செயலாற்றுவது எப்படி குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்படும்.
அடிப்படை கணினி அறிவுடன், 18 வயது நிரம்பிய அனைவரும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
இன்றைய காலகட்டத்தில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு, அனைத்து துறைகளிலும் புகுந்து விட்டது. ஆகையால் இந்த பயிற்சி இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது.
பயிற்சி நடைபெறும் இடம்:
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை,
இ.டி.ஐ.ஐ. அலுவலக சாலை,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.
வெளி மாவட்டத்தில் இருந்து வருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
இதுதவிர திங்கள் முதல் வெள்ளி வரையிலான அலுவலக நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை 9840114680 மற்றும் 9360221280 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.