

செயற்கை தொழில்நுட்பம் எனும் ஏஐ வரவுக்குப் பின், அனைத்துத் துறைகளிலும் இதன் பயன்பாடு மிகுந்து வருகிறது. இதன்படி நேரத்தை அதிகளவில் மிச்சப்படுத்த முடியும் என்பதால், பல முன்னணி நிறுவனங்கள் ஏஐ தொழிலநுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டன. அரசு சார்பிலும் ஒரு சில துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறை மெல்ல மெல்ல அமலுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் ஏஐ தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி கட்டணம் வசூலிக்கும் ‘பல்வழித்தட சுங்க நடைமுறை திட்டம் (MLFF)’, அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்துவிட்டால் இனி சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாகன ஓட்டிகளின் சிரமத்தைக் குறைக்க சுங்கச்சாவடிகளின் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவகையும் தற்போது வரப்போகும் புதிய சுங்கக் கட்டண நடைமுறையானது, நாட்டில் உள்ள வாகன ஓட்டிகள் அனைவருக்கும் பயன்படும் விதமாக அமையும்.
பொதுவாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நின்று, கட்டணத்தை செலுத்திய பிறகே கடந்து செல்லும். அதிலும் மாலை நேரங்களில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் வாகனங்கள் அனைத்தும் இயக்கத்திலேயே இருப்பதால், கணிசமான எரிபொருள் வீணாகிறது.
ஏஐ மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்காமல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் சுங்கச்சாவடியைக் கடக்கும் போது, வாகனத்தின் பதிவு எண்ணை ஏஐ தொழில்நுட்பம், செயற்கைக்கோள் மற்றும் ஃபாஸ்ட்டேக் ஆகியவற்றின் உதவியுடன் ஆய்வு செய்து கட்டணம் நிர்ணயிக்கப்படும். இந்தக் கட்டணத்தை வாகன ஓட்டிகள் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.
ஏஐ மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “சுங்கச்சாவடிகளில் ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு, வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாகனங்கள் மற்ற சாலைகளைக் கடப்பது போலவே, சுங்கச்சாவடியையும் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்தில் கடக்க முடியும். இதன் மூலம் ரூ.1,500 கோடி வரையிலான எரிபொருள் செலவை மிச்சம் படுத்த முடியும். அதோடு மத்திய அரசுக்கும் கூடுதலாக ரூ.6,000 வருவாய் கிடைக்கும். அடுத்த வருட இறுதிக்குள் இந்தத் திட்டம் 100% பூரத்தி அடைந்து விடும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதற்கு முன்பு வரை சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்க சுமார் 2 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும். ஃபாஸ்ட்டேக் நடைமுறை செயலுக்கு வந்த பின், வாகனங்களின் காத்திருப்பு நேரம் 1 நிமிடமாக குறைந்தது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாயும் கிடைத்தது.
இந்நிலையில் ஃபாஸ்ட்டேக் நடைமுறைக்கு மாற்றாக, ஏஐ தொழில்நுட்பம் வர உள்ளதால் மத்திய அரசின் வருவாயும் அதிகரிக்க உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 63 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதங்களில் சுங்கக் கட்டணத்தை மாற்றியமைப்பது வழக்கம்.
அவ்வப்போது கட்டணம் உயரும் நிலையில், தற்போது வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரத்தை முற்றிலுமாக குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.