
உலகளவில் தற்போது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு குறித்த பேச்சுகள் தான் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. இன்னும் ஒருசில ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏஐ கொண்டு வரும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இப்போதே ஏஐ வகுப்புகளை நடத்த தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக ‘செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் இணையக் கருவிகள் அறிவுத் திட்டத்தை’ சுமார் 20,000-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் படி, 6வது வகுப்பு முதல் 9வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்ப பாடப் புத்தகங்கள் மட்டுமே தற்போது வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஏஐ வகுப்புகளை எடுக்க ஆசிரியர்களும், ஹைடெக் ஆய்வகங்களும் இல்லை என அரசுப் பள்ளிகளில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் ஹைடெக் ஆய்வகங்களில் அதிவேக இணைய வசதி அவசியம். ஒருசில பள்ளிகளில் ஆய்வகங்கள் இருந்த நிலையில், அப்பகுதியின் நெட்வொர்க்கிற்கு ஏற்ப இணைய வசதியை பள்ளிகள் ஏற்படுத்திக் கொண்டன.
ஆனால் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் பள்ளிகள் அனைத்தும் பிஎஸ்என்எல் இணைய வசதியைப் பயன்படுத்தத் தொடங்கின. ஆனால் இதன் இணைய வேகம் மிகவும் மெதுவாக இருப்பதால் ஆய்வகங்கள் இருந்தும் இல்லாத நிலை தான். மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பிஎஸ்என்எல் இணைய வசதியே இல்லை. இதனால் புதிதாய் இணைய வசதியை ஏற்படுத்த ரூ.1 இலட்சம் முன்பணம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இந்நிலையில் இந்தத் தொகையை யார் செலுத்துவது என்ற கேள்வியும் தலைமையாசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறிப்பாக 3,000-ககும் மேற்பட்ட பள்ளிகளில் பிஎஸ்என்எல் இணைய வசதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஏஐ வகுப்புகளைத் தொடங்க முடியாமல் பள்ளிகள் திணறுகின்றன.
ஏஐ தொழில்நுட்ப வகுப்புகளை எடுக்க அந்தந்தப் பள்ளிகளில் உள்ள கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இவர்களுக்கு பணிச்சுமை கூடும் என்பதால், கற்பித்தல் திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக ஏஐ வகுப்புகளை நடத்த கணிணி அறிவியல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், ஹைடெக் ஆய்வகங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அரசுக்கு பள்ளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.