
தொழில்நுட்ப உலகின் புரட்சிகர மாற்றத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) பெரிதும் உதவி வருகிறது. பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அதேசமயம் இன்னும் சில ஆண்டுகள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், பலருடைய வேலை பறிபோகும் என்ற எச்சரிக்கையும் அவ்வப்போது உலா வருகிறது. யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், சிலர் நம்புவதற்கு கூட தயாராக இல்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அசாத்தியமான பல வேலைகளை மிக எளிதில் செய்து முடிக்கிறது ஏஐ. அவ்வகையில் தற்போது தண்ணீரே இல்லாத பாலைவனப் பகுதியில் செயற்கை மழையைப் பொழியச் செய்து முதல் சோதனையிலேயே வெற்றி கண்டுள்ளது ஏஐ தொழில்நுட்பம்.
ஒரு காலத்தில் இராஜஸ்தான் மாநிலத்தின் ராம்நகர் பகுதியில் பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு ஏரி உருவாக்கப்பட்டது. மேலும் ஏரியில் தண்ணீரைத் தேக்கி வைக்க அணையும் கட்டப்பட்டது. ஆனால் காலப்போக்கில் குடியிருப்புகள் தண்ணீர் வரும் கால்வாய்களை ஆக்கிரமிக்கவே ஏரியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. தற்போது வறண்டு பாலைவனமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் இந்தப் பகுதியை மீண்டும் தண்ணீரால் நிரப்ப அம்மாநில அரசு ஏஐ உதவியை நாடியுள்ளது.
ஜென் எக்ஸ் ஏஐ மற்றும் கம்பெனி எக்ஸெல்-1 ஆகிய 2 நிறுவனங்கள் ஒன்றிணைந்து ராஜஸ்தான் ராம் நகரில் செயற்கை மழையைப் பொழிவதற்கான ஆய்வை மேற்கொண்டன. இதன்படி கடந்த செப்டம்பர் 1, 5, 6 மற்றும் 7 ஆகிய நான்கு தேதிகளில் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் டிரோன்களைப் பயன்படுத்தி சோடியம் குளோரைடு விதைகள் தூவப்பட்டது. முதல் முயற்சியிலேயே செயற்கை மழைப் பொழிந்ததைக் கண்டு அம்மாநில வேளாண் துறை அமைச்சர் கிரோடி லால் மீனா மகிழ்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அமைச்சர் கிரோடி லால் மீனா, “அரை கிலோ சோடியம் குளோரைடு விதைகள் தூவப்பட்டதில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 0.08செ.மீ. மழைப் பொழிந்தது. ஏஐ உதவியுடன் செயற்கை மழைப் பொழிவு சோதனை வெற்றியடைந்ததால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைந்து தொடங்கவுள்ளோம். இதுதொடர்பாக விஞ்ஞானிகள், மத்திய மற்றும் மாநில அரசிடம் பேசி முடிவெடுக்கப்படும். அதோடு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். பாலைவனமாகத் திகழும் இப்பகுதி விரைவில் நீர் வளம் மிகுந்த பகுதியாக காட்சியளிக்கப் போகிறது” என் அவர் தெரிவித்தார்.