சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் உலகளவில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அனைத்து துறைகளிலும் நேரத்தை மிச்சப்படுத்தி, வேலையை விரைவில் முடித்துக் கொடுக்கும் அதிநவீன தொழில்நுட்பமாக ஏஐ பிரகாசிக்கிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உலகிலேயே முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சரை உருவாக்கியது தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியா. இந்த ஏஐ அமைச்சருக்கு ‘டயல்லா’ என்ற பெயரும் சூட்டப்பட்டது.
தொழில்நுட்ப உலகில் இதுவொரு அசாத்தியமான சாதனையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது செயற்கை நுண்ணறிவு அமைச்சர் டயல்லா, விரைவில் தாயாகப் போவதாக அல்பேனியா நாட்டு பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல 83 குழந்தைகளுக்கு ஏஐ அமைச்சர் தாயாகப் போகிறார்.
இன்றைய காலகட்டத்தில் பலரும் தனிமையை போக்கிக் கொள்ள ஏஐ உடன் நண்பராக பேசி வருகின்றனர். இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தில் மற்றுமொரு சாதனையாக ஏஐ மனிதர் தாயாக மாறவிருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மனித வடிவிலான அமைச்சரை உருவாக்கியது அல்பேனியா.
இதுவரை எந்த நாடும் எடுக்காத முயற்சியை அல்பேனியா எடுத்திருப்பது, உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உலக அளவில் மனிதர் அல்லாத முதல் செயற்கை அமைச்சர் டயல்லா தான். இந்த ஏஐ அமைச்சர் டயல்லாவுக்கு பொது கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டது. முறைகேடுகள் ஏதுமின்றி, வெளிப்படைத்தன்மையுடன் கொள்முதல் துறை இயங்க வேண்டும் என்பதற்காகவே டயல்லா இத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஏஐ அமைச்சர் டயல்லா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், வெகு விரைவில் 83 குழந்தைகளை பெற்றெடுப்பார் எனவும் அல்பேனியா நாட்டுப் பிரதமர் எடி ராமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ அல்பேனியா நாட்டு சோசலிஸ்ட் கட்சியில் உள்ள எம்.பி.க்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், 83 உதவியாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தற்போது செயற்கை நுண்ணறிவு அமைச்சரான டயல்லா கர்ப்பமாக உள்ளார். இவர் வெகுவிரைவில் 83 குழந்தைகளைப் பெற்றெடுக்க உள்ளார். இந்த குழந்தைகள் எம்.பி.க்களுக்கு உதவியாளர்களாக சேவை புரிய உள்ளனர்.
தொழில்நுட்ப வரலாற்றில் இதுவொரு புதிய மைல்கல்லாக பதிவு செய்யப்பட உள்ளது. அல்பேனியா நாட்டு பார்லிமெண்டில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உதவியாளர்கள் பதிவு செய்வர். எம்.பி.க்கள் இல்லாத சமயம் பார்லிமென்டில் நடக்கின்ற அனைத்து விவாதங்கள் மற்றும் நிகழ்வுகளை அவர்கள் வந்த பின், உதவியாளர்கள் தெரிவிப்பர். தேவைப்படும் நேரத்தில் எதிர்க்கட்சியினருக்கு பதில் அளிக்கவும் உதவியாளர்கள் தயார் நிலையில் இருப்பர்.
அடுத்த முறை என்னை நீங்கள் பார்லிமென்டில் காணும் போது, செயற்கை அமைச்சர் டயல்லாவுடன் 83 குழந்தைகளும் உடனிருப்பார்கள். இந்த புதிய முறை 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நடைமுறைக்கு வந்து விடும்” என அல்பேனியா பிரதமர் தெரிவித்துள்ளார்.