
தமிழ்நாட்டில் துப்புரவுப் பணிகள் தனியார் வசம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், குப்பைகளை சுத்தம் செய்ய AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது ஒரு தனியார் நிறுவனம். இதன் முதல்கட்டமாக சென்னையில் குப்பைகளை அள்ளும் பணியில் AI தொழில்நுட்பம் நடைமுறைக்கு வர இருக்கிறது. இதற்காக பேட்டரி வாகனங்களும், சார்ஜ் மையங்களும் விரைவில் அமைக்கப்பட உள்ளன. அதோடு பிரத்யேகமான மொபைல் செயலியை உருவாக்கவும் தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தின் ராயபுரம் மற்றும் திருவிக நகரில் தனியார் நிறுவனம் AI மூலம் குப்பையை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட உள்ளது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம், மெரினா கடற்கரை, நேரு உள்விளையாட்டு அரங்கம், தலைமைச் செயலகம் மற்றும் சென்னைத் துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அமைந்திருக்கும் ராயபுரம் மண்டலத்தில் தான் முதன்முதலில் குப்பைகளை சுத்தம் செய்யக் காத்திருக்கிறது AI தொழில்நுட்பம். குப்பை சேகரிக்கும் வண்டிகள், கடற்கரையை சுத்தம் செய்கின்ற இயந்திரம் மற்றும் குப்பையை அள்ளும் இயந்திரம் அனைத்தும் சென்சார்கள் மூலம் இணைக்கப்படும். இதன்மூலம் குப்பை சேகரிப்பை நேரடியாக கண்காணிக்க முடியும் என்கிறார் என்விரோ நிறுவனத்தின் தேசிய வணிக தலைவரான மனோஜ் சோனி.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “குப்பை சேகரிப்பின் போது ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், அதற்கேற்ப தகுந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்வோம். அனைத்துமே டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படுவதால், எங்கு தவறு நடந்தாலும் உடனுக்குடன் அதனைத் தீர்க்க முடியும். இதற்காக 1,300 பேட்டரி வாகனங்கள் மற்றும் 16 சார்ஜ் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னையின் குறுகிய தெருக்களில் சிறிய வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும். துப்புரவுப் பணியாளர்களின் வருகை இனி பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும். மேலும் அனைத்து குப்பை சேகரிப்பையும் கண்காணிக்க ராயபுரத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். AI வசதியுடன் எங்கு எவ்வளவு குப்பை சேகரமாகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
திருவிக நகர் மற்றும் ராயபுரம் ஆகிய இரு மண்டலங்களில் தினந்தோறும் 100 டன் குப்பைகள் சேர்கின்றன. துரித நடவடிக்கையின் மூலம் குப்பைகளை சுத்தம் செய்து, சென்னை மெரினா கடற்கரை மற்றும் காசிமேடு உள்ளிட்டப் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையின் பல இடங்களில் ஸ்மார்ட் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் குப்பைத் தொட்டிகள் நிரம்பினால் உடனே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்து விடும். இதன்மூலம் உடனுக்குடன் குப்பைகளை அகற்றலாம். மேலும் குப்பைகளைத் தரம் பிரித்து மறுசுழற்சி செய்யவும் தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க ஒரு செயலி உருவாக்கப்பட உள்ளது. மேலும் ஆங்காங்கே QR கோடு பலகைகள் வைக்கப்படும். இதனை ஸ்கேன் செய்தும் குறைகளைத் தெரிவிக்கலாம்.