அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி... தவெகவா? திமுகவா?... குழப்பத்தில் C.விஜயபாஸ்கர்?

C. Vijayabaskar
C. Vijayabaskarimage credit-newstodaynet.com
Updated on

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், அவர் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளை தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்தது. அதன் பின்னர் தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு மாற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுத்தோல்வியை தழுவிய நிலையில் அதிலும் குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் இன்னும் முழுமையாக அடங்காத சூழலில், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் வேகவேகமாக அதிமுகவிலிருந்து விலகி மாற்று கட்சிகளை தேடி வருவதாக கூறப்படுகிறது.

கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்துள்ளனர். மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இதையும் படியுங்கள்:
அதிமுக-வில் வெடித்த அடுத்த சர்ச்சை..! இபிஎஸ்-ஐ சந்திக்காமல் புதுக்கோட்டை விரைந்த சி.விஜயபாஸ்கர்!
C. Vijayabaskar

அந்த வரிசையில் தற்போது சி.விஜயபாஸ்கரின் பெயரும் அடிபட்டுக்கொண்டிருப்பது தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோருடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடித் தூக்கினார் சி.விஜயபாஸ்கர். குறிப்பாக, தவெக ஆட்சிக்கு ஆதரவளித்து சட்டப்பேரவையில் வாக்களித்ததால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கி, புதிய மாவட்ட செயலாளரை அறிவித்தார். இதனால் கடும் அதிருப்தியடைந்த விஜயபாஸ்கர் அப்போதே வேறு கட்சியில் இணைய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தனது ஆதரவாளர்கள், தொகுதி மக்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு முடிவெடுத்து தொகுதி மக்களின் நம்பிக்கையான சட்டமன்ற உறுப்பினராகச் செயல்படுவேன் என்று சொன்னவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் போவாரா? திமுக பக்கம் போவாரா என்ற பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையே அதிமுக சீனியர்கள் பலரும் சென்று தவெகவில் ஐக்கியமாகி உள்ள நிலையில், அந்த கட்சிக்கு செல்லலாமா என்ற யோசனையும் விஜயபாஸ்கருக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த முடிவில் இருந்து பின்வாங்கிய விஜயபாஸ்கர் புதிய கட்சியில் இணைந்தால் தனது அரசியல் அனுபவத்திற்கு ஏற்ற இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விஜயபாஸ்கர் மேல் சில ஊழல் புகார்கள் உள்ளதால் அவரை சேர்த்துகொள்ள தவெகவும் தயக்கம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் இயக்கத்தில் இணைந்து பயணிப்பது தொடர்பாகவும் விஜயபாஸ்கர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அண்ணாமலை இன்னும் தன்னுடைய இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றாத சூழலில் அவருடம் இப்போதே இணைந்து பயணிப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக தன்னுடைய தனிப்பட்ட நலம்விரும்பிகள் தெரிவித்ததையடுத்து அந்த திட்டமும் கைவிடப்பட்டிருக்கிறது.

இறுதியாக ஓ.பன்னீர்செல்வத்தை போல திமுகவிடம் சரணடைந்து விடலாம் என்று திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார் விஜயபாஸ்கர். ஆரம்பத்தில் விஜயபாஸ்கர் திமுகவில் இணைவதற்கு மூத்த நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைதொடர்ந்து திமுக தலைமையுடன் கடந்த சில வாரங்களாக மறைமுக பேச்சுகள் நடைபெற்றதாகவும், தற்போது அது சாதகமாக முடிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயபாஸ்கரின் புத்திக் கூர்மை, பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற அனுபவம், கள எதார்த்ததை அறிந்து அவர் செயல்படும் விதம், அவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் செல்வாக்கு இவற்றையெல்லாம் கணக்கிட்டு விஜயபாஸ்கர் வருகை திமுகவிற்கு கூடுதல் பலமாகதான் இருக்கும் என்று திமுக கணக்கிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, விராலிமலையில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயபாஸ்கர், விரைவில் திமுகவில் இணைய முடிவு செய்துவிட்டதாகவும் அதற்கான அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்த நிலையில், இன்னும் ஒரிரு நாளில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்:
#BREAKING : தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..!
C. Vijayabaskar

சி.விஜயபாஸ்கர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இனிவரும் காலங்களில் அதிமுகவில் இருந்து எத்தனை முக்கிய தலைகள் அடுத்தடுத்து கட்சி தாவ காத்திருக்கின்றனர் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com