இந்தியாவில் டெலிகாம் சேவையில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் துறைகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் அவ்வப்போது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகின்றன. அந்த வகையில் விரைவில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் அடுத்த 4 முதல் 5 மாதங்களுக்குள் 12% முதல் 15% வரை அதிகரிக்கஉ யர்த்தப்பட வாய்ப்புள்ளதாக Centrum Institutional Research அறிக்கை வெளியிட்டு இருந்தது.
இதற்கிடையே அதிர்ச்சி தரும் செய்தியாக இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு (Postpaid) திட்டங்களின் விலையை ரூ.50 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய கட்டண முறைகள் இன்று (அக்டோபர் 8) முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்திருப்பது வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பார்தி ஏர்டெல் (Bharti Airtel) என்பது இந்தியாவின் புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு முன்னணி உலகளாவிய பன்னாட்டுத் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாகும். இது ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பல நாடுகளில் தனது சேவைகளை வழங்கி வருகிறது.
சுனில் பார்தி மிட்டல் என்பவரால் கடந்த 1995-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், மொபைல் தொலைபேசி (2G, 4G, 5G), அதிவேக பிராட்பேண்ட் (Broadband), டிஜிட்டல் தொலைக்காட்சி (Airtel Digital TV) மற்றும் வணிகங்களுக்கான பிரத்யேகத் தகவல் தொடர்புச் சேவைகளை (Airtel Business) வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் கட்டணத் திட்டங்களின் மாத கட்டணத்தை அனைத்து பிரிவுகளிலும் Uniform-ஆக ரூ.50 உயர்த்தி உள்ளது.
இன்று (அக்டோபர் 8) முதல் அமலுக்கு வரும் திருத்தப்பட்ட திட்டங்களின்படி, தனிநபர் பயனர்களுக்கான கட்டணம் மாதத்திற்கு ரூ. 449-லிருந்து ரூ. 499-ஆக உயர்கிறது; இது சுமார் 11 சதவீத உயர்வாகும்.
இரண்டு சிம் (SIM) கார்டுகளுக்கான குடும்பத் திட்டத்தின் கட்டணம் ரூ. 699-லிருந்து ரூ. 749-ஆகவும், மூன்று சிம் கார்டுகளுக்கான திட்டத்தின் கட்டணம் ரூ. 999-லிருந்து ரூ. 1,049-ஆகவும் உயர்கிறது.
நான்கு சிம் கார்டுகளைக் கொண்ட குடும்பத் திட்டங்களைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில் மாதக் கட்டணம் ரூ. 1,199-லிருந்து ரூ. 1,249-ஆகவோ அல்லது ரூ. 1,399-லிருந்து ரூ. 1,449-ஆகவோ உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து சிம் கார்டுகளுக்கான குடும்பத் திட்டத்தின் கட்டணம் ரூ. 1,749-லிருந்து ரூ. 1,799-ஆக உயர்கிறது. அனைத்துத் திட்டங்களிலும் கட்டண உயர்வு சீராக ரூ. 50-ஆக இருந்தாலும், குறைந்த கட்டணத் திட்டங்களில் இதன் சதவீத தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் இந்தத் திட்டங்களின் விலையுடன் வழக்கமான 18% ஜிஎஸ்டி (GST) வரியும் கூடுதலாக வசூலிக்கப்படும்.
மேலும் இந்த கட்டண உயர்வுக்கு ஈடாக, அனைத்து போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் சலுகையாக வருடத்திற்கு ஒரு முறை இலவச சர்வதேச ரோமிங் (Free Annual International Roaming) வசதியையும் ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐந்து நாட்கள் செல்லுபடியாகும் இந்த ரோமிங் பேக்-இல் 5GB டேட்டா, 60 நிமிட இலவச அழைப்புகள் (Incoming & Outgoing), 25 அவுட்கோயிங் (outgoing) எஸ்எம்எஸ் (SMS)மற்றும் இலவச இன்கமிங் (incoming) எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும்.
வாடிக்கையாளர்கள் வெளிநாடு செல்லும்போது தங்களுக்குத் தேவையான நேரத்தில் Airtel Thanks செயலி மூலம் இந்த சலுகையைத் தாங்களாகவே ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
குடும்ப திட்டங்களில் (Family Plans) இருக்கும் ஒவ்வொரு சிம் கார்டிற்கும் தனித்தனியாக வருடத்திற்கு ஒரு முறை இந்த இலவச சர்வதேச ரோமிங் சலுகை கிடைக்கும்.
திருத்தப்பட்ட திட்டங்கள், வரம்பற்ற டேட்டா மற்றும் அழைப்புகள், 'ஃபாஸ்ட் லேன்' (Fast Lane) தொழில்நுட்பம் மற்றும் ஸ்பேம் (spam) மற்றும் மோசடியான இணைப்புகளுக்கு எதிரான நெட்வொர்க் அளவிலான பாதுகாப்பு உள்ளிட்ட ஏர்டெல்லின் தற்போதைய சலுகைகளைத் தொடர்ந்து வழங்குகின்றன.
தேர்ந்தெடுக்கப்படும் திட்டத்தைப் பொறுத்து, வாடிக்கையாளர்கள் Amazon Prime, JioHotstar, Xstream Play Premium, Google One, Apple Music, Apple iCloud+ மற்றும் Netflix போன்ற சேவைகளுக்கான சந்தாக்களையும் பெறுவார்கள்.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை செயல்பாட்டு இயக்குநர் அமித் திரிபாதி இத்திட்டத்தின் தொடக்கம் குறித்துப் பேசுகையில், ‘எங்கள் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு எப்போதுமே மிகச் சிறந்த அனுபவத்தைத் தருவதே எங்களின் முதன்மை நோக்கம். வாடிக்கையாளர்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்டை நாடி வர மேலும் பல நியாயமானக் காரணங்களை உருவாக்குவதிலேயே எங்கள் முழுக் கவனமும் உள்ளது’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
புதிய திட்டங்கள் அக்டோபர் 8-ஆம் தேதி முதல் புதிய மற்றும் தற்போதைய ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கப்பெறும். ஏர்டெல் செயலி (Airtel App) அல்லது ஏர்டெல் விற்பனை நிலையங்கள் வாயிலாகத் தற்போதைய பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் இப்புதிய திட்டங்களுக்கு மாறிக் கொள்ளலாம். அதேவேளையில், பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் ஏர்டெல் போஸ்ட்பெய்டு சேவைக்கு எளிதாக மாற முடியும்.
இன்று (அக்டோபர் 8) முதல் பயன்பாட்டுக்கு வரும் இப்புதிய திட்டங்களை, தற்போதைய பிரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏர்டெல் செயலி (Airtel App) அல்லது நேரடி விற்பனை மையங்கள் மூலம் பெறலாம்.
தற்போதைய வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, பிற நெட்வொர்க் பயன்பாட்டாளர்களும் மிக எளிதாக ஏர்டெல் போஸ்ட்பெய்டுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்!