

நமது அன்றாட வாழ்வில் தவிர்க்கவே முடியாத அங்கமாகி விட்டது அலைபேசி எனப்படும் செல்போன் மற்றும் கணினிகள். அலைக்கற்றைகள் மூலம் இயங்கும் இவற்றின் உதவியுடன் தான் துவங்குகிறது நமது அன்றாடத் தேவைகள் என்றால் மிகையல்ல. இந்த சேவை வழங்கும் நிறுவனங்களில் ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற தனியார் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளது.
முழுமையான அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் ( Bharat Sanchar Nigam Limited- BSNL) , மற்றும் அரசு பங்குடன் இயங்கும் தனியார் நிறுவனமான வோடபோன் (Vodafone Idea Limited (Vi) ) ஆகியவையும் சேவைகளை வழங்கி வருகிறது . இருப்பினும் சில சமயங்களில் சேவையில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்க கிராமப்புறங்களிலும் சேவைகளை மேம்படுத்தும் விதமாக அவ்வப்போது பலவித நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் வோடபோன் ஐடியா (Vi) நிறுவனங்கள் தங்களின் உள்கட்டமைப்பை (Towers, Fibre, Spectrum) (telecom infrastructure-ஐ) பகிர்ந்து கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த 4G/5G சேவைகளை வழங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்த கூட்டணியின் மூலம், ஏர்டெல் மற்றும் ஜியோவிற்குப் போட்டியாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நெட்வொர்க் கவரேஜ் அதிகரிக்கவும், குறைந்த கட்டணத்தில் தரமான சேவைகளை வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லைவ்மிண்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி கடந்த வாரம் தொலைத்தொடர்புத் துறை (DoT) செயலாளர் அமித் அகர்வால், "விஐ (Vi) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) ஆகிய இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மூலதனச் செலவுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் சீரற்ற நெட்வொர்க் வலிமை ஆகியவற்றால் சிரமப்படுவதால், கோபுரங்கள், ஃபைபர் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றைப் பகிர்வது குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாக" தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி இரு நிறுவனங்களின் நிதி நெருக்கடியைக் குறைத்து, செயல்பாட்டுச் செலவைக் குறைக்கும் (Cost reduction) என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு நிறுவனங்களின் கட்டமைப்பு இணைவதால் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நெட்வொர்க் தரம் மேம்படும் வாய்ப்பு அதிகமுள்ளது. குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு இணையாக, மலிவான விலையில் 4G/5G டேட்டா மற்றும் குரல் அழைப்பு சேவைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நெட்வொர்க் மேம்பாடுகளைத் துரிதப்படுத்தவும், முக்கிய சந்தைகளில் 5ஜி சமநிலையை அடையவும், செயல்திறனில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் மூலதனச் செலவில் 450 பில்லியன் இந்திய ரூபாய் (சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக வோடபோன் நிறுவனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிஎஸ்என்எல் உடனான உள்கட்டமைப்புப் பகிர்வுப் பேச்சுவார்த்தைகள் குறித்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிரடி ஆஃபர்கள் மற்றும் தரமான நெட்வொர்க் சேவைகளைத் தந்து மக்களிடம் வரவேற்பு பெற்ற ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு ஈடுகொடுத்து தங்களுடைய டவர்கள், ஃபைபர் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஆகியவற்றை பகிர்வதன் மூலம் சந்தையில் தாங்களும் நிலைத்திருக்க இந்த கூட்டணியை அரசு ஊக்குவிக்கிறது.
குறிப்பாக விஐ (Vi) நிறுவனம் ஆகஸ்ட் 2025-ல் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் தனது 5ஜி சேவைகளைத் தொடங்கியது , தற்போது அதன் விரிவாக்கங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.பிஎஸ்என்எல் (BSNL)இன்னும் 5ஜி-யை அறிமுகப்படுத்தவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்த இணைப்பு (partnership) நடந்தால் பயனர்களுக்கு மேம்பட்ட நெட்வொர்க் கவரேஜ் (Network coverage) விடுபட்ட
அழைப்பு (Call drop) குறையும் வாய்ப்பு, அதிகரித்த இணைய வேகம் (Internet speed) ,5ஜி அறிமுகம், போட்டி அதிகரிப்பதால் கட்டுப்பாடான ரீசார்ஜ் (recharge) விலை போன்ற பல நன்மைகள் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது Jio மற்றும் Airtel telecom சந்தையில் (market)முன்னிலை வகிப்பதால் BSNL மற்றும் Vi தனது வாடிக்கையாளர்களை (subscriber) இழக்கும் நிலையை சந்தித்து வருகின்றன. இதிலிருந்து மீண்டு வர இரு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த இணைப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.