

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் இதனை பயன்படுத்தி மோசடிகளும் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பொதுமக்கள் பலரும் போலியான ஆன்லைன் மோசடிகளில் சிக்கி பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக டிஜிட்டல் அரெஸ்ட் என்ற முறையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மோசடி செய்பவர்களும் காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது வழிகளை கண்டறிந்து வருகின்றனர். அவ்வகையில் தற்போது போலியான ஜிஎஸ்டி நோட்டீஸை அனுப்பி, மோசடி செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் வரி செலுத்துவோருக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்தால், முதலில் அது போலியானதா அல்லது உண்மையானதா என்பதை ஆராய வேண்டியது அவசியம். வரி செலுத்துவோர், போலியான ஜிஎஸ்டி நோட்டீஸ் கண்டு ஏமாற வேண்டாம் என மத்திய அரசின் மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி அமைச்சகம் (Central Board of indirect Taxes and Customs - CBIC) எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பு நிதியாண்டு வருகின்ற மார்ச் மாதத்துடன் முடிவடைய இருப்பதால், வரி செலுத்துவோரை குறி வைத்துள்ளது ஒரு மோசடி கும்பல். கடந்த சில நாட்களுக்கு முன்பு, வரி செலுத்துவோர் ஒருவரை ஜிஎஸ்டி அதிகாரி எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த அழைப்பு குறித்த தகவலை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் இதற்கு சிபிஐசி விளக்கம் அளித்துள்ளது.
இந்த விளக்கத்தில், “இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், தற்போது போலியான ஜிஎஸ்டி நோட்டீஸை அனுப்பி மோசடிகள் நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இநத நோட்டீஸ் பார்ப்பதற்கு உண்மையான சம்மன போலவே இருக்கும். இருப்பினும் பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் இந்த மோசடியில் இருந்து தப்பித்து விடலாம்.
ஜிஎஸ்டி நோட்டீஸில் 8 இலக்க Document Identification Number (DIN) இருக்கும். வரி செலுத்துவோர் இந்த எண்ணை சிபிஐசி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.cbic.gov.in/) உள்ளிட்டு சரிபார்த்துக் கொள்ள வேண்டும். சரிபார்த்த பிறகு இந்த எண் போலி என உங்களுக்குத் தெரிந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். போலி ஜிஎஸ்டி நோட்டீஸ் எவ்வழியில் உங்களுக்கு வந்தது உள்பட அனைத்து தகவல்களையும் புகார் கொடுக்கும் போது அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். வரி செலுத்துவோருக்கு மட்டுமின்றி, சாதாரண நபர்களுக்கும் இது மாதிரியான போலி நோட்டீஸ்கள் வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
முதலில் இதனைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம். இது உண்மையானது தானா என்பதை ஆராய்ந்து, அதன்பிறகு புகார் அளிப்பது சிறந்தது. பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதோடு, மற்றவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை அளிக்க வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.